சென்னை: முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.26) இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை சனிக்கிழமை காலை கூடியது. அப்போது திருக்குறளை படித்து அவை நடவடிக்கைகளை பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து, இரங்கல் குறிப்பை வாசித்தார். அதில்,‘இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் கடந்த ஏப்.25-ம் தேதி மறைவுற்ற செய்தி அறிந்து, இந்த பேரவை அதிர்ச்சியும், ஆற்றொனா துயரமும் கொள்கிறது.
விண்வெளி ஆய்வில் இந்தியாவை மிகப் பெரிய உயர்வு அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றிய கஸ்தூரி ரங்கன் மிகச் சிறந்த அறிவியலாளராக திகழ்ந்தார். திட்டக்குழு உறுப்பினர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் உள்ளிட்ட பல உயரிய பொறுப்புகளை வகித்தவர். மேலும் 2003, 2009-ம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியவர்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவால், அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அறிவியாலாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்த பேரவை ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றவும், மறைந்த கஸ்தூரி ரங்கனுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் அனைவரும் எழுந்து நின்று 2 மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.