புதுடெல்லி,
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இது குறித்து டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது;-
“நாம் ஒருபோதும் நம் அண்டை நாட்டவர்களுக்கு தீங்கு செய்யவோ அல்லது அவமரியாதை செய்யவோ மாட்டோம். ஆனால் தீமை செய்வதையே ஒருவர் குறிக்கோளாக கொண்டிருந்தால், அதற்கு தீர்வு என்ன?
மக்களை பாதுகாப்பதே மன்னரின் கடமை. கீதை அகிம்சையை கற்பிக்கிறது. ஆனால் அர்ஜுனன் போரிடுவதை உறுதி செய்வதற்காகவே அந்த போதனை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அர்ஜுனனின் எதிரிகளுக்கு அந்த வழியில்தான் நன்மை செய்ய முடியும்.
அகிம்சை நமது இயல்பு, நமது மதிப்பு. நமது அகிம்சை கொள்கை மற்றவர்களையும் அகிம்சாவாதிகளாக மாற்ற வேண்டும். நம்மைப் பார்த்து சிலர் மாறுவார்கள், ஆனால் மற்றவர்கள் மாற மாட்டார்கள். நீங்கள் என்ன செய்தாலும் சிலர் உலகில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.”
இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.