கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளியில் அதிமுக கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நடந்த திண்ணை பிரச்சார நிகழ்ச்சியில், தம்பிதுரை எம்பி முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அதிமுக கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரச்சார நிகழ்ச்சி நடந்தது. பேரவையின் மாவட்ட செயலாளர் கேஆர்சி தங்கமுத்து தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோ.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த அதிமுக இளைஞர் பாசறை ஒன்றிய இணைச் செயலாளர் சிவகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், ஒன்றிய இணைச்செயலாளர் குணசுந்தரி சீனிவாசன் உட்பட 30 பேருக்கும் மேற்பட்டவர்கள், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ, போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் திருமால், அனுமதியின்றி திண்ணை பிரச்சாரம் நடத்த கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கூறும்போது, ‘அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள், சாதனை விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி, ஒவ்வொரு பகுதியாக திண்ணை பிரச்சாரம் செய்து வருகிறோம். அனைவருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 11 வாரங்களாக தொடர்ந்து திண்ணை பிரச்சாரம் செய்து வருகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது?’ என்றார்.
தொடர்ந்து நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தம்பிதுரை எம்பி சமாதானம் செய்ய முயற்சித்தும் யாரும் கேட்கவில்லை. தொடர்ந்து, திண்ணை பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கினார். அதிமுக நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கட்சியினர், பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.
இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘மாவட்டத்தில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி ஆதரவாளர்கள் ஒரு கோஷ்டியாகவும், அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்பியின் ஆதரவாளர்கள் ஒரு கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த இரண்டு தரப்பினரிடையே எவ்வித பிரச்சினையும் சுமுகமாக இருந்தநிலையில், சமீபகாலமாக மீண்டும் இரண்டு தரப்பு ஆதரவாளர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளத்திலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் ஒருவருக்கும் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால், கட்சியின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும்’ என்றனர்.