சிஎஸ்கே அணிக்கு எதிர்கால நட்சத்திரம் கிடைத்துவிட்டார் – அனில் கும்ப்ளே

தென்னாப்பிரிக்க இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ் எதிர்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு ஒரு முக்கியமான வீரராக நிரூபிக்க முடியும் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளரும், ஜாம்பவான் பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது சொந்த மண்ணில் சிஎஸ்கேவின் தொடர்ச்சியான நான்காவது தோல்வியாகும். இருப்பினும், அந்த அணிக்கான தனது முதல் போட்டியில், பிரெவிஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார், அதில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கும். அவரது பங்களிப்பு சிஎஸ்கே அணி கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 

டெவால்ட் பிரெவிஸ் அண்மையில் தான் சிஎஸ்கே அணியுடன் இணைந்தார். காயமடைந்த பந்து வீச்சாளர் குர்ஜ்பனித் சிங்கிற்குப் பதிலாக சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் குறித்து கும்ப்ளே ஜியோஹாட்ஸ்டாரில் பேசினார். சென்னை ஆடுகளம் எளிதானது அல்ல – பந்து சில நேரங்களில் அங்கே நின்றுவிடும். ஆனால் பிரெவிஸ் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில், முதல் தர கிரிக்கெட் மற்றும் 19 வயதுக்குட்பட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார், அங்கிருந்து அவர் ஐபிஎல்லுக்கு வந்துள்ளார். அவருக்கு சிஎஸ்கே அசல் அணியில் இடம் கிடைக்கவில்லை, ஆனால் ஒரு பிளேயரின் காயம் காரணமாக வாய்ப்பு கிடைத்தது. பிரெவிஸிடம் எல்லா வகையான ஷாட்டுகளும் உள்ளன. இதுபோன்ற இளம் வீரர்களுடன் சேர்ந்து, சிஎஸ்கே ஒரு புதிய இளம் அணியை உருவாக்க முடியும். பிரெவிஸ் நீண்ட காலத்திற்கு அணிக்கு நன்மை பயக்கும் வீரராக இருக்க முடியும் என கும்பிளே தெரிவித்துள்ளார்.

21 வயதான பிரெவிஸ் அதிக அனுபவம் வாய்ந்தவர் அல்ல, ஆனால் அவர் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் தனது முத்திரையைப் பதித்துள்ளார். நீண்ட சிக்ஸர்களை அடிக்கும் அவரது திறமைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான உடனே அவர் தனது ஆக்ரோஷமான ஃபார்மைக் காட்டியுள்ளார். டெவால்ட் ப்ரெவீஸ் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமானார். இந்த ஆண்டு அந்த அணி அவரை ஏலம் எடுக்கவில்லை. 

சென்னை சூப்பர் கிங்ஸின் அணி குறித்து கும்ப்ளே பேசும்போது ‘என்னைப் பொறுத்தவரை, கான்வே தற்போது ஃபார்மில் இல்லாவிட்டாலும், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவன் கான்வே ஜோடி ஒன்றாக தொடக்க வீரர்களாக களமிறங்கியிருக்க வேண்டும். இதே ஜோடி சில வருடங்களுக்கு முன்பு CSK-வை சாம்பியனாக்கியது. ரச்சின் ரவீந்திரவிடம் திறமை இருக்கிறது, ஆனால் இந்த வடிவத்தில் அவர் கொஞ்சம் அவசரமாகத் தெரிகிறார். ஒருவேளை அவருக்கு மூன்றாவது இடத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும். பவுலிங்கில் சிஎஸ்கே பத்திரணாவைத் தாண்டி சிந்திக்கத் தொடங்க வேண்டும். மிடில் ஆர்டர் பலப்படுத்த வேண்டும். ஒரே ஒரு போட்டிக்குப் பிறகு நாதன் எல்லிஸ் போன்ற அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் விளையாடாமல் இருப்பது புரிந்துகொள்ள முடியாதது. இப்போது ஐந்து போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து எதிர்கால அணியைத் தயார்படுத்த இதுவே சரியான நேரம்” என கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

மேலும் படிங்க: அந்த நான்கு பேர் தான் காரணம்! தோல்வி குறித்து தோனி சொன்ன முக்கிய வார்த்தைகள்!

மேலும் படிங்க: ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக இந்த 5 வீரர்களை வெளியேற்றும் சிஎஸ்கே!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.