சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை (ஏப்.26) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் அடையாளம் தெரியாத 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
சிவகாசியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில், 30-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 50-க்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஏப்.26) காலை பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 2 அறைகள் சேதமடைந்தன. அங்கு பணியாற்றிய அடையாளம் தெரியாத 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அனைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி இருந்த அடையாளம் தெரியாத மூன்று பெண்களின் சடலம் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
மேலும், காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிவகாசியை சேர்ந்த பாக்கியம் என்ற பெண் நூறு சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தில் சார் ஆட்சியர் பிரியா மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.