புதுடெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில் நடைபெற்ற பாரத் ஜோடோ நடைப்பயணத்தின்போது செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசினார். அப்போது வீர சாவர்க்கர் குறித்து ராகுல் அவதூறு கருத்து தெரிவித்ததாக லக்னோ மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல் போன்றோர் சிறையில் வாடியிருந்தபோது, சாவர்க்கர் மட்டும் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியதாகவும், முஸ்லிம் நபர் ஒருவரை சாவர்க்கர் தாக்கியதாக சாவர்க்கரின் புத்தகத்திலேயே குறிப்பிட்டதாக ராகுல் காந்தி அப்போது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பாஜக உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து, தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யுமாறு அலகாபாத் நீதிமன்றத்தில் ராகுல் மனு அளித்தார். இருப்பினும், அவரது மனுவை அலகாபாத் நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். தன் மீதான அவதூறான சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக சுதந்திரமாக தனது கடமையைச் செய்ய தடையாக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:
எதிர்க்கட்சித் தலைவராக ராகுலின் கருத்துகள் பொறுப்பற்றவையாகக் கொள்ளப்படுகின்றன. இனிவரும் காலங்களில், இவ்வாறு சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாரையும் கேலி செய்ய வேண்டாம்.
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த முறை சாவர்க்கர், அடுத்த முறை மகாத்மா காந்தி ஆங்கிலேயர்களின் ஊழியர் என்று யாராவது கூறுவார்கள். மகாத்மா காந்தி கூட ஆங்கிலேயர்களைத் தொடர்புகொண்டபோது, உங்களின் விசுவாசமான ஊழியர் என்று குறிப்பிட்டது, ராகுல் காந்திக்கு தெரியுமா?
ஆங்கிலேயருக்கு, காந்தி எழுதிய கடிதத்தில் ஃபெய்த்புல் சர்வன்ட் (Faithful servant) என்ற வார்த்தையே பயன்படுத்தி இருந்தார். அப்படியென்றால் காந்தி ஆங்கிலேயருக்கு வேலைக்காரர் என்று அர்த்தமா?.. அப்படித்தான் பொருள்படுமா?
மகாராஷ்டிர மாநிலத்தில் வீர சாவர்க்கரை அனைவரும் போற்றுகின்றனர். எனவே, சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பொறுப்பற்ற வகையில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம்.
இதுபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பொறுப்பற்ற அவதூறு கருத்துக்களை வருங்காலத்தில் பேசினால் தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இருப்பினும் ராகுல் காந்தி மீதான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.