ஊட்டி: “2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும்” என துணை வேந்தர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார். மேலும், “தமிழக பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைப்புக்கு வித்திட்ட மாநாடு இது” என்று அவர் குறிப்பிட்டார்.
ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாடு நேற்று (ஏப்.25) தொடங்கியது. குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மாநாட்டை தொடங்கி வைத்தார். இரண்டு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 35 பல்கலைக்கழகம் சேர்ந்த துணை வேந்தர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று (ஏப்.26) இந்த மாநாட்டிவ் நிறைவு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி ஆளுநர் பேசியது: “தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்தன. துணை வேந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாமல் இருந்தனர். தற்போது இந்த மாநாடு வாயிலாக ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கடமை உங்களுக்கு உள்ளது. மாணவர்கள்தான் தேசத்தின் சொத்து.இந்த மாநாட்டின் வெற்றி என்பது இளைஞர்களை திறன் வாய்ந்தவர்களாக மாற்றி தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்பவர்களாக மாற்றுவது. இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதத்தினர் இளைஞர்கள். இவர்கள் திறனற்றவர்களாக இருந்தால் அது நாட்டுக்கு சுமையாகி விடும்.
சுதந்திரத்துக்கு பின்னர் நம்மை விட பின் தங்கியிருந்த நாடுகள் தற்போது நம்மை விட முன்னேறி விட்டன. 2008-ல் நான் சீனா சென்றிருந்த போது, நமது நாடு தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றத்தை வியப்பாக பார்த்தனர். ஆனால், இன்று அவர்கள் எட்ட முடியாத அளவுக்கு முன்னேறிவிட்டனர்.நம்மிடம் அறிவாற்றல் நிறைய இருக்கிறது. அவற்றை ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி ஒருங்கிணைத்தால் புதிய சிந்தனைகள் அறிவு பிறக்கும்.
இன்று செயற்கை நுண்ணறிவு பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவில் புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை சந்தித்து செயற்கை நுண்ணறிவு குறித்து பேசினேன். அது எவ்வளவு முக்கியமானது என்பது அது எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதும் தெரிய வந்தது. நமது நாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களைப் பயிற்றுவிக்கவும் அவர்களுக்கு சிறந்த திறனை கொடுக்கவும், செயற்கை நுண்ணறிவு பெரிதும் உதவியாய் இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு குறித்து பயிற்றுவிக்க தகுதியான திறமையான பயிற்றுநர்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. பேச்சுக் குறைபாடோடு பிறக்கும் குழந்தைகள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்வதாக கேள்விப்படுகிறேன். அவர்களை திறமையான மாணவர்களாக மாற்ற செயற்கை நுண்ணறிவு ஒரு வர பிரசாதம். இந்த மாநாடு பெரிய அளவில் பயன்பட்டதாக நம்பிக்கை கொடுத்ததாக துணைவேந்தர்கள் கூறினர்.
புதிய தொழில்நுட்பங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ் வரிசையில், நானோ ரோபோடிக்ஸ் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மூலம் மனித மூளை மற்றும் உடல் உறுப்புகளை உருவாக்கி வருகிறார்கள். இன்று உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. நமது மூளையை தூண்ட வேண்டும் என்பதற்காக தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இங்கு கிடைத்த புதிய சிந்தனை மற்றும் அறிவு சார்ந்த விஷயங்களை மாணவர்களை மெருகேற்ற பயன்படுத்துங்கள். ‘2047ல் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்பது நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். அது அடைய கடினமாக உழைக்க வேண்டும். இது போன்ற மாநாடுகள் இனியும் தொடரும்,” என்று அவர் பேசினார்.