புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்படாதது ஏன் என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று முன்தினம் அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின.
குறிப்பாக, சுற்றுலா தலமான பஹல்காமில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்படாதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு மத்திய உள்துறை மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அவர்கள் கூறியதாவது:
வரும் ஜூலை 3-ம் தேதி புனித அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட உள்ளது. அப்போது பஹல்காம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்.
பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும் பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்ல பாதுகாப்புப் படை தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. உள்ளூர் நிர்வாகம் தன்னிச்சையாக பைசரன் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கி உள்ளது.
பாதுகாப்புப் படைகளிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் அந்த பகுதியில் வீரர்களை பணியில் அமர்த்தி இருப்போம். தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து தகவல் அறிந்த 20 நிமிடங்களுக்குள் அங்கு பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்து சென்றனர். எனினும் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததை ஒப்புக் கொள்கிறோம்.
காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள், அரசு ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது வழக்கம். முதல்முறையாக சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதை எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு மத்திய உள்துறை மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
காஷ்மீர் பகுதி ராணுவ வட்டாரங்கள் கூறியிருப்பதாவது: காஷ்மீரின் ஹாஜி பூர் கணவாய் பகுதி பூகோளரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இது காஷ்மீர் பள்ளத்தாக்கையும் ஜம்மு பள்ளத்தாக்கையும் இணைக்கும் பகுதி ஆகும். தற்போது ஹாஜி பூர் கணவாய் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளது. இந்த கணவாய் பகுதி வழியாகவே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் நுழைகின்றனர்.
கடந்த 1965-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. அப்போது ஹாஜி பூர் கணவாய் பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றியது. அதன்பிறகு தாஷ்கண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்காரணமாக ஹாஜி பூர் கணவாய் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேச போர், 1999-ம் ஆண்டு கார்கில் போரின்போது இந்திய ராணுவத்தின் கை ஓங்கி இருந்தது. அந்த போர்களின்போது ஹாஜி பூர் கணவாயை கைப்பற்றும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த பகுதியை கைப்பற்றாததால் எல்லை தாண்டிய தீவிரவாதம் தற்போதுவரை தீராத பிரச்சினையாக நீடித்து கொண்டிருக்கிறது.
கடந்த 2014-ம் ஆண்டில் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதேபோல ஹாஜி பூர் கணவாய் பகுதியை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.