புதுடெல்லி: உ.பி.யில் முதல்வர் பயிற்சித் திட்டத்தின் 13 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வென்று குடிமைப்பணி பெற்றுள்ளனர். மேலும் 280 மாணவர்கள், மாநில குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
உ.பி.யில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக முதல்வர் அபியுதயா திட்டம் கடந்த 2021 முதல் நடைபெற்று வருகிறது. மாநில அரசின் சமூக நலத்துறை நடத்தும் இத்திட்டம் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதில் பயின்ற மாணவர்களில் 13 பேர் மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வில் வென்றுள்ளனர். சமீபத்தில் வெளியான 2024 யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் இது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் மாநில சமூக நலத்துறை இணை அமைச்சர் அசீம் அருண் கூறுகையில், “உ.பி.யின் 75 மாவட்டங்களில் மொத்தம் 166 அபியுதயா பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இந்த பயிற்சித் திட்டமமானது ஒரு கற்றல் தளம் மட்டுமின்றி, மாநில இளைஞர்களின் கனவுகளுக்கு சிறகுகள் வழங்கும் ஒரு புரட்சிகர முயற்சியாகவும் மாறியுள்ளது.
முதல்வர் யோகி அரசு ஏழை மற்றும் பின்தங்கிய சமூகத்தின் திறமையான குழந்தைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. அதில் ஒன்றாக முதல்வர் அபியுதயா திட்டம் அமைந்துள்ளது” என்றார்.
முதல்வர் அபியுதயா திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பயிற்சி மையங்களில், உ.பி. மாநில குடிமைப் பணியான பிசிஎஸ் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பெற்ற 280 தேர்வர்கள் பிசிஎஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அபியுதயா பயிற்சி திட்டத்துக்கான வசதிகள் மற்றும் ஏற்பாடுகளை மேலும் விரிவுபடுத்த உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது.