‘சென்னை vs ஹைதராபாத்’
சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில், ‘6 போட்டிகளையும் தொடர்ந்து வென்று ப்ளே ஆப்ஸூக்கு செல்லும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.’ என ப்ளெம்மிங் பேசியிருந்தார். இத்தனை அடிகளை பட்ட பிறகும் சென்னை அணிக்குள் எஞ்சியிருந்த நம்பிக்கை ரசிகர்களுக்கு ஒரு தெம்பைக் கொடுத்திருந்தது.

ஆனால், ப்ளெம்மிங் பேசியதெல்லாம் வெறும் வாய் வார்த்தைகள் மட்டும்தான் போல. களத்தில் செயல்பாட்டில் சிஎஸ்கேவிடம் எந்த நம்பிக்கையும் இல்லை. குறிப்பாக, பேட்டிங்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. அடைக்க அடைக்க புதிது புதிதாக உருவாகும் ஓட்டைகளைக் கொண்ட மூழ்கும் கப்பலை போலத்தான் சிஎஸ்கேவின் பேட்டிங் இருந்தது.
‘தீராத பிரச்சனைகள்!’
ஓப்பனிங் கூட்டணி செட்டே ஆகவில்லை என விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தன. அதற்கு தாமதமாகவேனும் சிஎஸ்கே செவி மடுத்தது. ஷேக் ரஷீத் ஓப்பனிங் இறங்கினார். பிரச்னை தீரவில்லை. உடனே ரச்சினை நீக்குங்கள். ரச்சின்தான் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக ஆடுகிறார். அவருக்கு டி20 செட் ஆகாது என விமர்சனம் எழுந்தது. அவரையும் நீக்கினார்கள்.

சென்னை அணியின் ஓப்பனர்களாக நாம் எதிர்பார்க்கவே செய்யாத வகையில் சரசாரியாக 20 வயதை கொண்ட ஆயுஷ் மாத்ரேவும் ஷேக் ரஷீத்தும் இறங்கினார்கள். அப்போதும் எந்த மாற்றமும் இல்லை. இன்று ஓப்பனிங்கில் ஆயுஷ் மாத்ரே மட்டும் நன்றாக ஆடினார். ஓப்பனிங்கில் நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை மொமண்டம் கிடைக்கவில்லை. அதிரடியாக ஆடுவதற்காக நம்பர் 3 இல் அனுப்பப்பட்ட சாம் கரண் பந்தை உருட்ட மட்டுமே செய்தார்.
நம்பர் 4 க்கு ப்ரமோட் செய்யப்பட்டிருக்கும் ஜடேஜா பவர்ப்ளேக்குள்ளாகவே வந்தார். பாவம்… அவர், அவருக்கு திக்கும் தெரியவில்லை. திசையும் தெரியவில்லை. கடந்த சீசன்களில் சிஎஸ்கேவுக்கு பெரும் நம்பிக்கையாக விளங்கிய சிவம் துபே இந்த சீசனில் அணியின் சுமையாக மாறி வருகிறார். தோனி மட்டும்தான் நம்பிக்கையோடு ஆடி வந்தார். ஆனால், அவரும் சிக்கினால் அடிப்போம்.

இல்லையேல் நடையைக் கட்டுவோம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார். இன்றைக்கு சென்னை அணிக்கு பாசிட்டிவ்வாக அமைந்த இரண்டே பேர் ஆயுஷ் மாத்ரேவும் டெவால்ட் ப்ரெவிஸூம்தான். ஆயுஷ் மாத்ரேவால் பவர்ப்ளேயில் அழகாக பீல்டிங் இடைவெளிகளை கண்டடைந்து பவுண்டரி அடிக்க முடிகிறது.

டெவால்ட் ப்ரெவிஸ் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை அடித்தார். நடப்பு சீசனில் சென்னை அணியின் சார்பில் ஒரு வீரர் இவ்வளவு அதிரடியாக ஆடி பார்க்கவே இல்லை. சென்னை அணிக்காக முதல் போட்டியிலேயே அசத்தியிருக்கிறார்.
ஆனால், இவர்கள் இருவரும் ஆடிய ஒரு சில நிமிடங்கள் மட்டும்தான் போட்டி சென்னையின் கட்டுக்குள் இருந்தது. மற்ற இடங்களிலெல்லாம் பவுண்டரி அடிக்கவும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவுமே சென்னை அணியின் பேட்டர்கள் திணறி வந்தனர். போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் ப்ளெம்மிங் இன்னொரு விஷயத்தையும் பேசியிருந்தார்.

‘மிஸ் ஆகும் ரோல் க்ளாரிட்டி!’
அதாவது, சென்னை அணியின் டாப் ஆர்டர் சொதப்புவதால் மற்ற வீரர்கள் அவர்கள் இறங்க வேண்டிய இடத்திலிருந்து வேறு இடத்தில் இறங்க வேண்டியிருக்கிறது. அதுதான் பிரச்சனை.’ என்றார். இது ஓர் நல்ல கவனிப்பு. ஏனெனில், சென்னை அணியில் ஒவ்வொரு வீரருக்கும் அந்த Role & Responsibility மிகத் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும். அணியில் அவர்கள் என்ன கதாபாத்திரத்தை செய்யப் போகிறார்கள்.
அவர்களின் பணி என்னவென்பது தெளிவாகத் தெரியும். ஆனால், இங்கே போட்டியின் தொடக்கத்திலேயே சென்னை அணி அதிக விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. அப்படி நடக்கும் போது மிடில் ஆர்டர் வீரர்களும் கீழ் மிடில் ஆர்டர் வீரர்களும் அவர்கள் இறங்க வேண்டிய இடத்தை விட்டு வேறு இடத்தில் இறங்குகின்றனர். அதனால் சென்னையின் பேட்டிங் ஆர்டர் சொதப்புகிறது என்பதையும் எடுத்துக் கொள்ளலாம்.

என்ன காரணம் சொன்னாலும் நடப்பு சீசனின் மோசமான பேட்டிங்கை கொண்டிருப்பது சிஎஸ்கேதான். நடப்பு சீசனில் மிகக்குறைவான ரன்ரேட்டாக 8.1 ரன்ரேட்டை வைத்திருப்பது சென்னைதான். அதேமாதிரி, அதிக சிக்சர்கள் அடித்த அணிகளின் பட்டியலிலும் 49 சிக்சர்களோடு சிஎஸ்கே கடைசி இடத்தில்தான் இருக்குறது. எதிர்கொண்டதில் 53% பந்துகளை மட்டும்தான் சிஎஸ்கே பவுண்டரிக்களாக மாற்றியிருக்கிறது. இதுவும் இருப்பதிலேயே குறைவுதான்.
‘அடைக்க முடியாத ஓட்டைகள்!’
2020 சீசனில் சென்னை அணி மோசமாக தோற்றிருந்தது. அந்த சீசனில் அணியின் தவறுகளை திருத்த முடியாமல் தோனியே புலம்பியிருப்பார். ‘Too many holes in the ship’ என விரக்தியாக பேசியிருப்பார். அதேதான் இந்த சீசனிலும்.

இந்த அணியில் அடைக்க முடியாத அளவுக்கு எக்கச்சக்க ஓட்டைகள் இருக்கின்றன. இந்த அணிக்கு இந்த சீசன் அவ்வளவுதான்!