சென்னை: அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மனோ தங்கராஜ் நாளை (ஏப். 28) மீண்டும் அமைச்சராகிறார். அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் கே. பொன்முடி ஆகியோரின் ராஜினாமாவை ஏற்குமாறு முதல்வர், ஆளுநருக்கு பரிந்துரைத்தார். ஆளுநர் இந்தப் பரிந்துரையை அங்கீகரித்துள்ளார்.
அதோடு, அமைச்சர்களின் இலாகா மாற்றம் மற்றும் துறை ஒதுக்கீடுகளுக்கான முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் அங்கீகரித்துள்ளார். அதன்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வசம், மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. எனவே, அவர் போக்குவரத்து மற்றும் மின்சார அமைச்சராக இருப்பார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஒதுக்கப்படுகிறது. எனவே, அவர் வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சராக இருப்பார்.
பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கூடுதலாக வனங்கள் மற்றும் காதி துறைகளை கவனிப்பார். மேலும், பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ., டி.மனோ தங்கராஜை அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் பரிந்துரைத்துள்ளார். இந்தப் பரிந்துரையை ஆளுநர் அங்கீகரித்துள்ளார். நியமிக்கப்பட்ட அமைச்சரின் பதவியேற்பு விழா நாளை (28.4.2025) மாலை 6.00 மணிக்கு சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றத்தின் பின்னணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2021-ல் அமைந்த அமைச்சரவையில் க.பொன்முடி மற்றும் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தனர். இதையடுத்து அவர் பதவி இழந்தார். 2024 செப்டம்பர் 26-ம் தேதி உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அவர் அமைச்சராக பதவியேற்றார்.
அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ‘தற்போது அமைச்சராக இல்லை என்று கூறி ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைத்த ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகி உள்ளார். இதனால், அவருக்கு எதிராக சாட்சி அளிக்க யாரும் முன்வரமாட்டார்கள் என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 23-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் செந்தில் பாலாஜி அமைச்சரானதை ஏற்க முடியாது. அமைச்சராக இல்லை என்பதால்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எனவே, அவருக்கு ஜாமீன் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என்பதை செந்தில் பாலாஜி ஏப்ரல் 28-ம் தேதிக்குள் (நாளை) முடிவுசெய்து பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். இதனால், அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் பதவியை இழந்தார். தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று, தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதால், மீண்டும் அமைச்சரானார். இந்நிலையில், சமீபத்தில் சென்னை அன்பகத்தில் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம், பெண்கள் தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின.
இந்த விவகாரத்தில், அவர் மீது வழக்குப்பதிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் கூறியுள்ளது. இதுபோன்ற சட்ட நடவடிக்கைகள் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதன் காரணமாக, இருவரும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.