இந்தியா கடந்த 10 ஆண்டுகளில், 17 கோடி பேரை வறுமை கோட்டுக்கு மேல் உயர்த்தியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 2011-12-ம் ஆண்டில் 16.2 சதவீதம் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். இந்த அளவு கடந்த 2022-23-ம் ஆண்டில் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது. 17 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு மேல் சென்றுள்ளனர்.
கிராமங்களில் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்களின் சதவீதம் 18.4 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் இந்த எண்ணிக்கை 10.7 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதமாக குறைந்துள்ளது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் இடைவெளி 7.7 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதமாக குறைந்துள்ளது.
குறைந்த நடுத்தர வருவாய் பிரிவில் 37 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இந்தப் பிரிவில் கிராமங்களில் ஏழ்மையானவர்கள் 69 சதவீதத்திலிருந்து 32.5 சதவீதமாக குறைந்துள்ளனர். நகர்ப்புறங்களில் 43.5 சதவீதத்திலிருந்து 17.2 சதவீதமாக குறைந்துள்ளனர். ஆண்டுக்கு 7 சதவீதம் பேர் குறைந்து வருகின்றனர்.
உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார், மேற்குவங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 2011-12-ம் ஆண்டு மிக ஏழ்மையானவர்கள் 65 சதவீதம் பேர் இருந்தனர். கடந்த 2022-23-ம் ஆண்டில் இந்த அளவு 54 சதவீதமாக இருந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.