லாகூர்: கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியுள்ளார். அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியதாவது: “பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தினால், அவர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள ராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் வெறும் கண்காட்சிக்கானது அல்ல. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 130 அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை எங்கு உள்ளன என்று யாருக்கும் தெரியாது. இந்த அணு ஆயுதங்கள் அனைத்தும் இந்தியாவை மட்டுமே குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன” என கூறியுள்ளார்.
எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தானில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.