இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுத்துள்ளது. அதில் ஒன்று இந்தியா உடனான அனைத்து விதமான வர்த்தகத்தையும் நிறுத்துவது தொடர்பான அறிவிப்பு. இதனால் அந்த நாட்டில் மருந்து விநியோக சங்கிலி பெரிய அளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
ஏனெனில், அந்த நாட்டின் மருந்து தேவையில் சுமார் 30 முதல் 40 சதவிதம் வரையில் இந்தியாவை நம்பியே உள்ளது. குறிப்பாக மருந்து சார்ந்த மூலப்பொருட்கள் மற்றும் பல்வேறு மேம்பட்ட சிகிச்சை பொருட்களும் இதில் அடங்கும். இந்நிலையில், மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை பெற அவசரகால தயார்நிலை சார்ந்த நடவடிக்கையை அந்த நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் மருந்து விநியோக சங்கிலியை உறுதி செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் முயற்சித்து வருவதாக அந்த நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து முறையான அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும் அவசரகால நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2019-ல் ஏற்பட்ட நெருக்கடிக்கு பிறகு இது மாதிரியான சூழலை எதிர்கொள்ள தங்கள் தரப்பு எப்போதும் தயார் நிலையில் இருந்து வருவதாக பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது. அதனால் இப்போது மருந்து தேவைகளை சமாளிக்க மாற்று வழிகளை கண்டறிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனா, ரஷ்யா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்து தங்களுக்கு தேவையான மருந்துகளை பெறுவதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்தியாவசிய மருந்துகள், ரேபிஸ் தடுப்பூசி, பாம்பு விஷ எதிர்ப்பு மருந்து, புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள், மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் போன்ற மருந்து விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய அந்த நாட்டு மருந்து ஒழுங்குமுறை ஆணையம் முயற்சித்து வருவதாக தகவல்.
இந்த முயற்சி ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், இந்தியா உடன் வர்த்தக முறிவு என அறிவித்துள்ள நிலையில் மருந்து விநியோகம் சார்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என அந்த நாட்டில் இந்த துறை சார்ந்து இயங்கி வரும் வணிகர்கள், மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதனால் கடுமையான மருந்து பற்றாக்குறை ஏற்பட வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக கள்ளச்சந்தையில் தரமற்ற மருந்துகள் அண்டை நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் சூழல் உள்ளது. இந்த நிலையில் இந்தியா உடனான வர்த்தகத் தடையிலிருந்து மருந்து, மாத்திரைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கக் கோரி இந்த துறை சார்ந்த தலைவர்கள் பாகிஸ்தான் அரசிடம் முறையிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.