கோவை: தவெக-வின் ஆட்சி சிறுவாணி தண்ணீரை போல் சுத்தமான ஆட்சியாக அமையும் என, அக்கட்சித் தலைவர் விஜய் பேசினார்.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி முகவர்களுக்கான இரண்டாம் நாள் பயிற்சி பட்டறை நிகழ்வு கோவை எஸ்.என்.எஸ் கல்லூரி வளாகத்தில் இன்று (ஏப்.27) நடந்தது. அதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பேசியதாவது: பயிற்சி பட்டறை முதல் நாள் நிகழ்வில் நான் பேசும்போது இந்த நிகழ்வு ஓட்டுக்காக மட்டும் நடத்தப்படுவது அல்ல என்று கூறினேன். காரணம் நமது தவெக அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது. நம்மிடம் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
மக்களுக்கு நன்மை நடக்கிறது என்றால் எந்த ஒரு நிலைக்கும் செல்ல தயங்க மாட்டோம். நமது ஆட்சி அமைந்த பின் ஊழல் இருக்காது, குற்றவாளிகள் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் எவ்வித தயக்கமின்றி மக்களை சென்று சந்தியுங்கள். அவ்வாறு சந்திக்கும் போது அறிஞர் அண்ணா கூறிய,‘மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, மக்களை நேசி, மக்களுக்காக சேவை செய்’ என்பதை அனைவரும் புரிந்து செயல்பட்டால் உங்கள் ஊரின் சிறுவாணி தண்ணீரை போல் சுத்தமான ஆட்சியாக நமது ஆட்சி அமையும்.
இன்னும் தீர்க்கமாக கூற வேண்டுமென்றால் தெளிவான உண்மையான, வெளிப்படையான நிர்வாகம் செய்யும் ஆட்சியாக அமையும். எனவே இவற்றை மக்களிடம் எடுத்து செல்லுங்கள். ஓட்டு போடும் மக்களுக்கு உதவ வேண்டியது நம் கடமை.
குடும்பம் குடும்பமாக கோயிலுக்கு போவது போல, குடும்பம் குடும்பமாக பண்டிகைகள் கொண்டாடுவது போல, குடும்பமாக வந்து நமக்காக வாக்களிக்கும் மக்கள் அதனைக் கொண்டாட்டமாக செய்ய வேண்டும். அப்படி ஒரு மனநிலையை மக்களிடம் நீங்கள் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தெரியும் த.வெ.க என்பது கட்சியல்ல விடுதலைக்கான பேரணி என்பது.
அந்த வெற்றியை நாம் அடைவதில் பூத் முகவர்களின் செயல்பாடு முக்கியம். நீங்கள் தான் முதுகெலும்பு. நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.
2 மணி நேரத்திற்கு மேல் நடந்த ரோட்‘ஷோ’: முன்னதாக இன்று மாலை நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரிக்கு விஜய் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து பிரச்சார வேன் மூலம் ரோட் ஷோ நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் மக்கள் வரவேற்பு அளித்தனர். அதிக வாகனங்கள் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக கல்லூரி வளாகத்தை சென்றடைய 2 மணி நேரத்திற்கு மேலானது. முதல் நாள் நிகழ்வில் பிரச்சார வாகனத்தின் கதவு தொண்டர்கள் கூட்டத்தால் சேதமடைந்ததால் காரில் சென்றார். இரண்டாம் நாள் நிகழ்வில் வாகனத்தின் கதவு சரிசெய்யப்பட்டதால் அதில் பயணித்தார்.