சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை (ஏப்ரல் 26), ஆனந்த விகடனின் `நம்பிக்கை விருதுகள்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அதிகார அத்துமீறல்களை, முறைகேடுகளை, கேள்விக்குள்ளாக்கி அம்பலப்படுத்தும் சமரசமற்ற சட்டப் போராளி.. தகவல் உரிமைச் சட்டத்தை ஆயுதமாகக்கொண்டு கடந்த 25 ஆண்டுகளில் காவல்துறை தொடங்கி உள்ளாட்சி வரைக்கும் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.ஐ மனுக்களைப் போட்டு அரசுத்துறைகளை அதிரவைத்த ‘வழக்கறிஞர் லோகநாதன்’ அவர்களுக்கு ‘விட்டுக்கொடுக்காத சட்டப் போராளி’ என விகடன் டாப் 10 மனிதர்கள் விருது வழங்கப்பட்டது.

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கைகளால் விருது பெற்றுக்கொண்டு பேசிய லோகநாதன், “நீதித்துறை சரியாக இருந்திருந்தால் இன்று இந்தியாவில் இவ்வளவு பிரச்னை இருந்திருக்காது.
நீதித்துறையின் தற்போதைய வேகப் பாய்ச்சல் எல்லா காலங்களிலும் இருந்திருந்தால் இந்தியா மிகப்பெரிய வல்லரசாக இருந்திருக்கும் என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து.
கேள்வி கேட்பது என்பது யாருக்குமே பிடிக்காது. எல்லாமே சகித்துக்கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு நாம் நகர்ந்து செல்வதுதான் இன்றைய சமூகத்தில் எல்லாருமே செய்து கொண்டிருக்கிறோம்.
வழக்கறிஞர்கள் மீது இந்த சமூகத்தில் மிகப்பெரிய ஒரு மரியாதை இல்லை. வழக்கறிஞர் அப்படின்னு சொன்னா அதற்கு வீடு தர மாட்டாங்க. ஒரு வழக்கறிஞர் நினைத்தால் இந்த சமூகத்தை மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை நான் இந்த சட்டத்தின் மூலமாக இன்று நிரூபித்திருக்கிறேன்.

அதற்காக ஆனந்த விகடன் இந்த விருதைக் கொடுத்திருக்கிறது. இன்றைய தமிழ்நாட்டில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அந்த வழக்கறிஞர்கள் தன்னுடைய பணியை மட்டும் செய்யாமல், இந்த சமூகம் சார்ந்த பணியைச் செய்தால் இன்று மிகப்பெரிய ஒரு சமூக மாற்றத்தைக் கொண்டுவரலாம். வழக்கறிஞர் தொழில் என்பது சம்பாதிப்பதற்கான தொழில் மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கு வழிகாட்டக்கூடிய ஒரு மகத்தான தொழில்.

ஒரு பத்து வருடத்திற்கு முன்பாக 2009-ல் முதல் முதலாக தொண்டாமுத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு நபரை ஓட்டுக்குப் பணம் கொடுத்ததற்காக அவருக்குத் தண்டனை வாங்கி கொடுத்தேன். ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறவர்கள் தண்டிக்கப்பட்டால் ஆறு வருடங்களுக்கு அவர் ஓட்டளிக்கும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. இந்தியா முழுவதும் ஓட்டுக்குப் பணம் என்ற இந்த புற்றுநோய் இந்தியாவினுடைய ஜனநாயகத்திற்குப் பேராபத்தை உருவாக்கும் என்பது என்னுடைய கருத்து.” என்று கூறினார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
