காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்புடையவர்கள், சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இதன்படி 121-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் நாட்டு மக்கள் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரத்தில் அனைத்து இந்தியர்களும் பங்கெடுத்து உள்ளனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பான படங்களை பார்க்கும்போது நாட்டு மக்கள் அனைவரின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது. இந்த தாக்குதல் தீவிரவாதிகளின் கோழைத்தனத்தை வெளிப்படுத்துகிறது.
காஷ்மீரில் அமைதி திரும்பி கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன. வரலாறு காணாத வேகத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனநாயகம் ஆழமாக வேரூன்றத் தொடங்கியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. மக்களின் வருவாய் பெருகி வருகிறது. இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது.
இது பாரதத்தின் எதிரிகளுக்கு, ஜம்மு-காஷ்மீரின் எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. காஷ்மீரை மீண்டும் அழிக்க தீவிரவாதிகள் துடிக்கிறார்கள். அதற்காக மிகப்பெரிய சூழ்ச்சி வலையைப் பின்னி பஹல்காமில் தீவிரவாத தாக்குதலை நடத்தி உள்ளனர்.
தீவிரவாதத்துக்கு எதிராக 140 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்து போரிட வேண்டும். நம்முடைய ஒற்றுமைதான் நமது மிகப்பெரிய பலம். இப்போது தேசத்துக்கு முன்பாக எழுந்திருக்கும் சவாலை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான பாரதத்தின் போருக்கு ஒட்டுமொத்த உலகமும் ஆதரவு அளிக்கிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும். இந்தத் தாக்குதலில் தொடர்புடையவர்கள், சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் அண்மையில் காலமானார். இந்திய விண்வெளி துறை மட்டுமன்றி புதிய தேசிய கல்விக் கொள்கையை வரையறுத்ததில் அவர் மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறார். அவருடைய சாதனைகள், பங்களிப்புகள் எப்போதுமே நினைவில் கொள்ளப்படும்.
நாட்டின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா ஏவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. விண்வெளி துறையில் பாரதம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக
ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்தோம். நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றோம். செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தில் வெற்றி பெற்றோம். ஆதித்யா-எல் 1 மூலம் சூரியனுக்கு அருகில் சென்றுள்ளோம். பல்வேறு நாடுகள் தங்களுடைய செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தவும், விண்வெளி பயணங்களை மேற்கொள்ளவும் இஸ்ரோவின் உதவியை நாடி வருகின்றன.
விண்வெளி துறை சார்ந்து 325-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. வரும் காலத்தில் விண்வெளியில் நமது நாடு புதிய உயரங்களை தொடும். குறிப்பாக ககன்யான், ஸ்பேஸ்டெக் மற்றும் சந்திரயான் – 4 திட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளன. வீனஸ், செவ்வாய் கிரக ஆராய்ச்சியிலும் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த மாதம் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டிருக்கிறது. அந்த நாட்டுக்கு உதவ, ‘ஆபரேசன் பிரம்மா’ திட்டத்தின் மூலம் விமானங்கள், கப்பல்களில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பாரத மீட்புப் குழுவினர் மியான்மரில் முகாமிட்டு மீட்புப் பணியை மேற்கொண்டனர். நிலநடுக்கம் பாதித்த பகுதியில் பாரதத்தின் சார்பில் மருத்துவமனை அமைக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உலகம் ஒரு குடும்பம் என்ற கொள்கையை நாம் பின்பற்றுகிறோம். இதன்படி உலகின் மிகச் சிறந்த நண்பனாக பாரதம் செயல்படுகிறது.
பேரிடரை எதிர்கொள்ள சாஷே செயலி: இயற்கை பேரிடர்களின்போது மிகுந்த எச்சரிக்கை உணர்வோடும், விழிப்போடும் இருக்க வேண்டும். இதற்கு சாஷே என்ற செயலி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கிய இந்த செயலி வெள்ளம், சூறாவளி, நிலச்சரிவு, சுனாமி, காட்டுத்தீ, பனிச்சரிவு, புயல், புழுதி காற்று, மின்னல் தாக்குதல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அளிக்கும். இந்தச் செயலியின் மூல் நீங்கள் வானிலை ஆய்வுத் துறையின் அண்மைத் தகவல்களை பெறலாம். அனைத்து மாநில மொழிகளிலும் இந்த செயலி தகவல்களை வழங்குகிறது.
பாரதத்தின் சார்பில் அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தத் தடுப்பூசிகள், வெறிநாய்க்கடி, டெட்டனஸ், குளிர் ஜுரம், ஹெபாடிடிஸ் பி போன்ற அபாயகரமான நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவிகரமாக இருக்கும். நேபாளத்தின் வேண்டுகோளை ஏற்று அந்த நாட்டுக்கும் மருந்துகள், தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளோம்.
கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தின்போது, ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின்படி நாடு முழுவதும் 140 கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. இந்த இயக்கத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும்.
குஜராத்தின் அகமதாபாத்தில் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 70 லட்சம் மரங்கள் வளர்க்கப்பட்டு உள்ளன. இதனால் அகமதாபாதின் பசுமைப் பகுதி கணிசமாக அதிகரித்திருக்கிறது.
தமிழக விவசாயி திருவீர அரசு: தமிழ்நாட்டை சேர்ந்த திருவீர அரசு என்பவர் காபி பயிர் விவசாயம் செய்து வந்தார். அவர் கொடைக்கானலில் விளச்சி மரங்களை நட்டார், அவருடைய 7 ஆண்டுகள் உழைப்புக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. இந்த மரங்கள் மகசூல் அளிக்கத் தொடங்கி உள்ளன. இவருக்கு கிடைத்த வெற்றியைப் பார்த்து அக்கம்பக்கத்தை சேர்ந்த மற்ற விவசாயிகளும் ஊக்கம் பெற்றுள்ளனர்.
சுதந்திர போராட்ட வரலாறு: கடந்த 1917-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வித்தியாசமான சுதந்திர போராட்டம் நடைபெற்றது. பிஹார் விளைநிலங்களில் அவுரிச் செடியை பயிரிட ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினர். இந்த செடியால் விளைநிலங்கள் மலடாகின. அப்போது மகாத்மா காந்தி பிஹாரின் சம்பாரணுக்கு சென்றார். அவரிடம் விவசாயிகள் முறையிட்டனர். காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரகத்தால் ஒட்டுமொத்த ஆங்கிலேய ஆட்சியும் ஆட்டம் கண்டது. வேறு வழியில்லாமல் அவுரிச் செடியை பயிர் செய்ய விவசாயிகளை வற்புறுத்தும் சட்டத்தை ஆங்கிலேயர்கள் நிறுத்திவைத்தனர்.
நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் பிஹார் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். இதுதொடர்பாக Satyagraha in Champaran என்ற புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை அனைத்து இளைஞர்களும் படிக்க வேண்டும்.
ஏப்ரல் 6-ம் தேதி காந்தியடிகளின் தாண்டி யாத்திரை நிறைவடைந்தது. ஏப்ரல் மாதத்தில் ஜலியான்வாலாபாக் படுகொலை நடைபெற்றது. மே 10-ம் தேதி முதல் சுதந்திரப் போராட்ட ஆண்டு விழா வருகிறது. சுதந்திரப் போராட்ட தலைவர்கள், வீரர்களின் வரலாறை நாம் உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.