புதுடெல்லி,
ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் பிற முக்கிய நடவடிக்கைகளுக்கு பொது ‘வைபை’ நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
விமான நிலையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வைபை வசதி வழங்கப்படுகிறது. ஆனால் அது உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். இந்த பொது ‘வைபை’ நெட்வொர்க்குகளில் பல முறையாக பாதுகாக்கப்படவில்லை. இதனால் அவை ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு எளிதான இலக்காகின்றன.
எனவே பொது வைபை நெட்வொர்க்குகள் மூலம் வங்கி அல்லது ஆன்லைன் ஷாப்பிங் போன்ற முக்கியமான செயல்களை செய்ய வேண்டாம். இதனால் பயனர்கள், தரவு திருட்டு, நிதி இழப்பு மோசடிக்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்படும்போது பரிவர்த்தனைகள் செய்வதையோ அல்லது தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவதையோ தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.