சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 121-வது அத்தியாத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது ‘SACHET’ என்ற மொபைல் செயலி குறித்து குறிப்பிட்டிருந்தார்.
“நண்பர்களே, இப்போது நாம் பேரிடர் மேலாண்மை பற்றிப் பேசி வந்தோம். எந்த ஒரு இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ளவும் மிகவும் முக்கியமானது எது என்றால் அது உங்களுடைய எச்சரிக்கையுணர்வு, விழிப்போடு இருத்தல். இந்த எச்சரிக்கையுணர்வுக்கு உதவிகரமாக, உங்களுடைய செல்பேசியில் ஒரு விசேஷமான செயலி உங்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கும்.
இந்தச் செயலியானது நீங்கள் எந்தவொரு இயற்கைப் பேரிடரிலும் சிக்காதவாறு காப்பாற்றுகிறது, இதன் பெயரும் கூட SACHET (சசேத்). சசேத் செயலியை, இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியிருக்கிறது. வெள்ளம், சூறாவளி, நிலச்சரிவு, ஆழிப்பேரலை, காட்டுத்தீ, பனிச்சரிவு, புயல், புழுதிக்காற்று அல்லது மின்னல் தாக்குதல் போன்ற பேரிடர்கள் ஏற்படும் வேளையில், இந்த சசேத் செயலி உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அளித்து, பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.
இந்தச் செயலியால் நீங்கள் வானிலை ஆய்வுத் துறைசார் அண்மைத் தகவல்களைப் பெறலாம். குறிப்பாக, இந்த சசேத் செயலி, மாநில மொழிகளிலும் கூட பல தகவல்களை அளிக்கிறது. இந்தச் செயலியால் நீங்களும் பயனடையுங்கள், உங்கள் அனுபவங்களைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
SACHET செயலி: பேரிடர் பாதிப்பு குறித்த முன்னறிவுப்புகளை இந்த செயலி வழங்கும். இந்த தகவல் அரசு தரப்பில் வழங்கப்படுகிறது. இதோடு வானிலை சார்ந்த அறிவிப்புகளை இந்திய வானிலை மையத்தின் துணையோடு இந்த செயலியில் பயனர்கள் பெற முடியும். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்த முடியும். (தமிழில் நாம் பயன்படுத்தி பார்த்தபோது அது அப்படியே ஆங்கிலத்தில் இருந்து நேராக இணையம் மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது போல இருந்தது. ஹோம் பேஜ் என்பது தமிழில் ‘வீடு’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அது முகப்பு என்று இருக்க வேண்டும்). இதில் அவசர கால உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2023-ம் ஆண்டில் இந்த செயலி வெளியிடப்பட்டது. ஆண்ட்ராய்டு 8 மற்றும் அதற்கடுத்த ஆண்ட்ராய்டு பதிப்புகளில் இந்த செயலியை பயனர்களை பயன்படுத்த முடியும். கூகுள் பிளே ஸ்டோரில் மட்டும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆப்பிள் ஐபோன்களிலும் இந்த செயலியை பயன்படுத்த முடியும்.