Ben Stokes, Mumbai Indians : ஐபிஎல் 2025 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல்பாதி ஐபிஎல் நிறைவடைந்து இரண்டாம் பாதி ஐபிஎல் தொடங்கிவிட்டது. இனி வரும் ஒவ்வொரு போட்டியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளை தீர்மானிக்கும். ஒரு போட்டியில் தோற்றால் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும். அந்த அணிகளால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது. அதேநேரத்தில் கடந்த சில போட்டிகளாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்திருக்கிறது. புள்ளிப் பட்டியலிலும் 5வது இடத்தில் இருக்கிறது. இன்னும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் உறுதி செய்துவிடும்.
அதற்கான தீவிர திட்டமிடலில் இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த நேரத்தில் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் மும்பை வந்துள்ளார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் வந்து அழைத்துச் சென்றனர். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே பென் ஸ்டோக்ஸூம் தங்கியிருக்கிறார். இதனால் அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து விசாரிக்கும்போது, பென் ஸ்டோக்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம் தெரிவிக்கவில்லை. அவர் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதற்காக இந்த ஐபிஎல் தொடரின் ஏலத்தில் கூட தன்னுடைய பெயரை பதிவு செய்யவில்லை. அதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை என்ற தகவலும் உலா வருகிறது. தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிப்பதற்காக அவர் மும்பை வந்திருப்பதாகவும், தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் மும்பை அணிக்காக அவர் விளையாடுவதால், இந்தியா வந்த பென் ஸ்டோக்ஸை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் பார்த்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் ஐபிஎல் பரபரப்பாக சென்று கொண்டிருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி ஆச்சரியமான முடிவுகளை எடுத்தாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றனர். ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் இணைந்தால் அதற்கான அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும்.