காந்திநகர்,
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள தேவலியா கிராம அருகே அம்ரேலி-சவர்குண்ட்லா நெடுஞ்சாலையில் கடந்த 24-ந்தேதி அதிகாலை அதிவேகமாக வந்த லாரி மோதி பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்தது.
லாரியை ஓட்டிய டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்ற நிலையில், போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து சம்பந்தப்பட்ட நபரை தீவிரமாக தேடி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரியை கண்டறிந்த போலீசார், அதன் டிரைவரான ராஜேஷ் பதாரியாவை கைது செய்தனர்.
அவர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 மற்றும் வனவிலங்கு (பாதுகாப்பு) திருத்த சட்டம் 2022 ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராஜேஷ் பதாரியா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கோர்ட்டு நிராகரித்ததை தொடர்ந்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.