வக்பு நிலங்கள் மூலம் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்: தமிழ்நாடு வக்பு வாரியம்

ராமேசுவரம்: தமிழ்நாடு முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான காலியாக, பயன்படுத்தாமல் உள்ள இடங்களில் சமுதாய மக்கள் பயன்பெறும் வண்ணம் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மதரசாக்கள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தேவையான அனைத்து அனுமதிகளையும் வழங்க தயாராக உள்ளதாக தமிழ்நாடு வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் நவாஸ்கனி எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு, ‘தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் இயங்கும் வக்பு நிறுவனங்களின் அனைத்து முத்தவல்லிகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான காலியாக, பயன்படுத்தாமல் உள்ள இடங்களில் சமுதாய மக்கள் பயன்பெறும் வண்ணம் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மதரசாக்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு வக்பு வாரியம் அனைத்து அனுமதிகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வழங்க தயாராக உள்ளது, என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பின் அடிப்படையில், வளர்ச்சிப் பணிகளின் தொடக்கமாக வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டம் தாஹிர் முகமது கான் மாஸ்க் வக்புவிற்கு பாத்தியப்பட்ட பயன்படுத்தப்படாமல் காலியாக இருந்த 3.11 ஏக்கர் நிலத்தில் பேர்ணாம்பட்டு நகர மற்றும் சுற்றுவட்டார கிராம புறத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு பேர்ணாம்பட்டு முஸ்லிம் எஜுகேஷன் சொசைட்டி நிர்வாகம் முன்வந்து கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கைக்கு தமிழ்நாடு வக்பு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் அந்த பகுதி ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைவார்கள். வக்பு சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பதற்கும், எந்த நோக்கத்திற்காக முன்னோர்கள் தங்களின் சொத்துக்களை வக்புவாக அர்ப்பணித்தார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும், இது போன்ற வளர்ச்சி பணிகளை தமிழ்நாடு வக்பு வாரியம் தொடர்ந்து முன்னெடுக்கும்.

தமிழ்நாடு முழுவதும் காலியாக பயன்படுத்தப்படாமல் உள்ள வக்பு நிலங்களை சமூக மக்கள் பயன்படும் வண்ணம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு வக்பு வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கொண்டிருக்கிறது. இந்த பொறுப்பில் அனைவரும் ஒருங்கிணைந்து சமுதாயம் பயன்படும் வண்ணம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.’ இவ்வாறு நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.