விஜய் கோவை விசிட்; கூட்டம், குழப்பம் டு டார்கெட் கொங்கு – தவெக பூத் கமிட்டி கூட்ட ஸ்பாட் ரிப்போர்ட்!

தவெக மேற்கு மண்டலம் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாள்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக அந்தக் கட்சியின் தலைவர் விஜய் நேற்று காலை 11 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வந்தார்.

விஜய்

சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் கோவை வந்துள்ளார். அதிலும் தவெக கட்சி தொடங்கிய பிறகு, முதல்முறையாக சென்னை மண்டலத்துக்கு வெளியே செல்கிறார்.

விமான நிலையத்தில் குவிந்த தொண்டர்கள்

இதனால் இந்த பயணம் அவரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கோவை விமான நிலையத்தில் காலை 9 மணி முதலே விஜயின் ரசிகர்கள், தொண்டர்கள் குவிந்தனர். விமான நிலையத்தில் அவரை வரவேற்க 50 பேருக்கு மட்டுமே அனுமதி, அதனால் கூட்டம் கூட வேண்டாம் என்று காவல்துறை விடுத்த அறிவிப்புகளை தவெகவினர் காது கொடுத்து கேட்கவில்லை.

விஜய்

கூட்டம் தொடர்ந்து அதிகரிக்கு காவல்துறை சில இடங்களில் லேசான தடியடி நடத்தியது. தொடர்ந்து தவெக சார்பில் விஜய்க்கு தடபுடல் வரவேற்பளிக்கப்பட்டது.

ரோடு ஷோ

அவர் தன்னுடைய கேரவானில் தோன்றியபடி, லீ மெரிடியன் ஹோட்டல் வரை தொண்டர்களுக்கு கை அசைத்தபடி ரோட் ஷோவாக வந்தார். அப்போது சில ரசிகர்கள் பாதுகாப்பை மீறி கேரவானில் ஏறி விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். ரசிகர்கள் அவரை சந்திக்க முட்டி மோதியதில் கேரவான் கதவுகள் சேதமடைந்தன.

தவெக பூத் கமிட்டி

பிறகு அவர் ஹோட்டலில் ஓய்வுக்கு சென்றுவிட்டார். மறுபக்கம் கருத்தரங்கம் நடைபெற்ற எஸ்என்ஆர் பொறியியல் கல்லூரியில் தொண்டர்கள் குவிய தொடங்கினார்கள். ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் வருகை புரிய தொடங்கினார்கள்.

சுமார் 8,000 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட விஜயை சந்திப்பதற்காக ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் கல்லூரி வளாகத்தில் குவிந்திருந்தனர். ஆரம்பத்தில் பாஸ் உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். நுழைவு வாயில் முன்பு சில தொண்டர்கள், “2026 தேர்தலில் ஆசிரியர்களின் ஓட்டு அண்ணனுக்கே. TVK For Teachers” போன்ற வாசகங்களுடன் பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

கட்சி துண்டு
ஆசிரியர்கள்

கல்வி நிறுவனம் என்பதால் கட்சிக்காரர்களின் கட்சி துண்டு உள்ளே அனுமதிக்கப்படவில்லை. நுழைவிலேயே அதைத் தனியாக சேகரித்து வைத்தனர். நிர்வாகிகள் நீண்ட வரிசையில் நின்று, க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்து, தங்களின் செல்போன்களை ஒப்படைத்த பிறகே நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கூட்டம்… குழப்பம்!

நிகழ்ச்சி நடந்த ஆடிட்டோரியத்துக்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் ரசிகர்கள், கல்லூரி மாணவர்கள், பாஸ் இல்லாத தொண்டர்கள் விஜயை சந்திக்க கேட் மீது ஏறியும், உடைத்துக் கொண்டும் உள்ளே சென்றனர். அவர்களிடம் காவல்துறையும், பவுன்சர்களும் கடுமையான கெடுபிடி காட்டினர். மறுபக்கம் பாஸ் இருந்தும் பல நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

புஸ்ஸி ஆனந்த்

இதனால் அவர்கள் பாதுகாவலர்களுடன் கோபத்தில் வாக்குவாதம் செய்தனர். நிர்வாகிகள் கூட்டம் அதிகம் இருந்ததால், அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேரி கார்டு மீது ஏறி பேச முயற்சி செய்தபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

கோவை முழுவதும் இருந்து தவெகவினர் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் இந்த நிகழ்வுக்கு வந்தனர். அப்போது அதிவேகமாகவும், கட்சி துண்டை பறக்கவிட்டு சாலையில் கூச்சலிட்டும் வந்தனர். இதில் சில இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே விழுந்து விபத்து ஏற்பட்டது.

தவெக
விபத்து

நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட தவெகவினரின் வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். 4 மணி நேர ஓய்வுக்கு பிறகு விஜய் லீ மெரிடியன் ஹோட்டலில் இருந்து கருத்தரங்கத்துக்கு புறப்பட்டார். தன்னுடைய கேரவான் சேதமடைந்ததால் கருப்பு நிற ஃபார்ச்யூனர் காரில்  சென்றார்.

விஜய் வந்தவுடன் கருத்தரங்கம் தொடங்கியது. பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு மிச்சர், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், குறிப்பு எடுக்க விஜய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சிறிய நோட் வழங்கப்பட்டது.  தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தவெக பூத் கமிட்டி

பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் பூத் கமிட்டியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்கள். முன் வரிசையில் இருந்த சில பெண் நிர்வாகிகள் மட்டுமே அதை குறிப்பு எடுத்தனர்.

மண்ணோட மரியாதை

விஜய் பேசும்போது, “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். கோவை என்றாலும், கொங்கு பகுதி என்றாலும், இந்த மண்ணோட மரியாதை தான் முதலில் நினைவுக்கு வரும்.” என கோவையை முதலில் டார்கெட் செய்தார். தொடர்ந்து, “இது ஒட்டுகாக மட்டும் நடத்தும் கூட்டம் இல்லை. இதுவரை மற்றவர்கள் செய்தததை நாம் செய்ய போவதில்லை.

விஜய்

மக்களிடம் இருந்து எப்படி ஓட்டு வாங்க போகிறோம் என்பதை பற்றி மட்டுமல்லாமல், மக்களுடன் நாம் எப்படி ஒன்றிணைய போகிறோம்  என்பதற்குதான் இந்த பயிற்சி பட்டறை. இதுவரை நிறைய பேர்.. நிறைய பொய் சொல்லி ஆட்சியை பிடித்து இருக்கலாம். இனி அது இனி நடக்காது. நடக்க விட மாட்டோம்.

போர் வீரருக்கு சமம்

தவெக மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு போர் வீரருக்கு சமம். எப்படிப்பட்ட ஆட்சியை மக்களுக்கு அமைக்க போகிறோம் என்பதை சொல்லுங்கள். மனதில் நேர்மை, கரை படியாத அரசியல் கைகள் நம்மிடம் இருக்கிறது. உழைக்க உடம்பில் தெம்பு இருக்கிறது. பேச உண்மை இருக்கிறது.

தவெக விஜய்

களம் தயாராக இருக்கு. போய் கலக்குங்கள். வெற்றி நிச்சயம், நல்லதே நடக்கும்.” என சுருக்கமாக பேசினார். ஸ்பீக்கர் சொதப்பி எக்கோ அடித்த காரணத்தால் அவர் பேசிய சில கருத்துகளும் கூட தொண்டர்களுக்கு சரியாக புரியவில்லை.

கருத்தரங்கம் முடிந்து கிளம்பும்போது வழக்கம் போல ரசிகர்களும், தொண்டர்களும் அவரின் வாகனத்தை சூழ்ந்து செல்பி எடுக்க முயற்சி செய்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே இரவு விஜய் தங்கியுள்ள லீ மெரிடியன் ஹோட்டலுக்கு அருகே கோகுலம் பார்க் என்ற தனியார் நட்சத்திர விடுதி உள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்

அந்த ஹோட்டலுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையினர் சோதனை நடத்தி, அது புரளி என்று விளக்கமளித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.