நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 27) டெல்லியில் தொடரின் 46வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு வீசப்பட்டது. டாஸை வென்ற பெங்களூரு அணி கேப்டன் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக அபிஷேக் போரலும் ஃபாஃப் டு பிளசிஸும் களம் இறங்கினர். காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடமல் இருந்த டு பிளசிஸ் இந்த போட்டியின் மூலம் மீண்டும் அணிக்கு திரும்பினார். சிறப்பாக தொடங்கிய போரல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கருண் நாயர் 4, டு பிளசிஸ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பெங்களூரு அணி சீரான இடைவெளியில் டெல்லி அணியின் வீரர்களை வீழ்த்தி வந்தனர். அணியின் சூழ்நிலையை புரிந்துக்கொண்ட கே.எல்.ராகுல் களத்தில் நின்று ரன்களை சேர்த்தார். அவர் 41 ரன்களை எடுத்திருந்தார். கடைசி நேரத்தில் ஸ்டப்ஸ் ரன்களை குவிக்க டெல்லி அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்களை சேர்த்தது. பெங்களூரு அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்களையும் ஹெசில்வுட் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் டெல்லி அணி தொடக்கமே பெங்களூரு அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தியது. ஜேக்கப் பெத்தேல் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அதையடுத்து படிக்கல் டக் அவுட் ஆனார். களத்திற்கு வந்த படிதாராவது ரன்களை சேர்பார் என பார்த்தால் அவரையும் கருண் நாயார் அருமையான டரக்ட் ஹிட் மூலம் ரன் அவுட் செய்தார்.
ஆனால் இதையடுத்து நடந்ததை டெல்லி சிறிதும் எதிர்பார்க்கவில்லை. களத்திற்கு வந்து கோலியுடன் கைகோர்த்த குர்னால் பாண்டியா, நிதானமாக கையாண்டு தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். கோலியும் கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும் என முடிவெடுத்து சிங்கில்ஸ் டபிள்ஸ் மட்டுமே எடுத்தார். இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தனர். அரைசதம் கடந்த கோலி 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை குர்னால் பாண்டியா களத்தில் இருந்தார், அவர் 73 ரன்களை சேர்த்திருந்தார். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் படிங்க: ஐபிஎல்லில் டக் அவுட்டே ஆகாமல் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியல்!
மேலும் படிங்க: ஆல் அவுட்டான லக்னோ.. பாயிண்ட்ஸ் டேபிளில் டாப்புக்கு சென்ற மும்பை அணி!