மன் கி பாத் நிகழ்ச்சியின் 121வது அத்தியாயத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கும் உலக மக்களுக்கும் உரையாற்றினார். அப்போது, பிரதமர் மோடி ஒரு செயலியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலியின் பெயர் SACHET ஆப். இந்த செயலி எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
சாச்செட் ஆப் என்றால் என்ன?
சாச்செட் செயலி மூலம் எந்தவொரு பேரழிவு குறித்தும் முன்கூட்டியே எச்சரிக்கை பெறலாம். இது இந்தியாவில் உள்ள முதல் மற்றும் ஒரே தேசிய பேரிடர் எச்சரிக்கை செயலி. குடிமக்களுக்கு நிகழ்நேர பேரிடர் எச்சரிக்கைகளை வழங்குவதற்காக இந்த செயலியை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த செயலியைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் தற்போதைய இருப்பிடத்திற்கான எச்சரிக்கை தகவல்களை பெறலாம். பொது எச்சரிக்கை நெறிமுறை என்னும் Common Alerting Protocol – CAP திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.
வானிலை அறிவிப்புகளுக்கான எச்சரிக்கை செயலி
சச்செட் மொபைல் செயலி, இயற்கை பேரிடர்களின் போது மக்களைப் அழிவில் இருந்து பாதுகாக்கவும், முன்கூட்டிய எச்சரிக்கைகளை வழங்கவும் உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான கருவி. இதற்காக, அதிகாரப்பூர்வ அரசாங்க வட்டாரங்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இது தவிர, SACHET செயலி மூலம் அன்றாட வானிலை அறிவிப்புகளையும் பெறலாம். இந்த செயலி இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) வானிலை அறிக்கைகள் மற்றும் முன்னறிவிப்புகள் பற்றிய தகவல்களை மக்களுக்கு வழங்குகிறது.
பேரிடர் மேலாண்மை அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் செயலி
இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பேரிடர் மேலாண்மை அமைப்புகளுடன் இணைந்து இந்த செயலி செயல்படுகிறது. இந்த செயலியை தமிழ் உட்பட 12 இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படலாம். எச்சரிக்கைகளைப் படிக்க முடியாதவர்களுக்கு, ‘ஒலி வாசிப்பு’ (Read-Out Loud) வசதியும் உள்ளது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும்.
இயற்கை பேரழிவுகள் குறித்த எச்சரிக்கைகளைப் பெறலாம்
இந்த செயலியின் மூலம், பயனர்கள் கனமழை, புயல்கள் மற்றும் பிற இயற்கை பேரழிவுகள் குறித்த எச்சரிக்கைகளைப் பெறலாம். ஐபோன் பயனர்கள் இந்த செயலியை ஆப் ஸ்டோரிலிருந்து எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த செயலியை கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலியை இதுவரை 5 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும், இந்த செயலிக்கு கூகிள் பிளே ஸ்டோரில் 3.7 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.