குன்னூர்: இந்திய ராணுவ முன்னாள் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமன்(78) குன்னூரில் காலமானார். இவருக்கு 42 குண்டுகள் முழங்க, ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன், ராணுவத்தில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். பாம்பே சாப்பர்ஸின் கர்னல் கமாண்டராகப் பணியாற்றியுள்ள இவர், இந்திய ராணுவத்தின் தகவல் அமைப்புகளின் முதல் இயக்குநராகவும், மேற்கு கட்டளையின் ராணுவ தளபதியாகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். 40 ஆண்டு சேவைக்குப் பிறகு 2006-ம் ஆண்டு ராணுவ துணைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றார்.
பின்னர், நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருந்து வெலிங்டன் எரிவாயு மயானத்துக்கு இவரது உடல், தேசியக் கொடி போர்த்தப்பட்டு ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு, ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், எம்.ஆர்.சி. மைய துணை கமாண்டென்ட் குட்டப்பா மற்றும் ராணுவ அதிகாரிகள், அவரது குடும்பத்தினர், ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் பலரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், 42 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்திய பிறகு, பட்டாபிராமன் உடல் தகனம் செய்யப்பட்டது.