புதுடெல்லி: ஓடிடி, சமூக வலைதளங்களில் நிலவும் கட்டுப்பாடற்ற ஆபாசங்களை தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாமே என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, பத்திரிகையாளரும், முன்னாள் தகவல் ஆணையருமான உதய் மஹுர்கர் மற்றும் பிறர் தொடர்ந்த பொதுநல வழக்கு இன்று (ஏப்.28) நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏஜி மாஷிஷ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசுக்கும், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஆல்ட்பாலாஜி, முபி, உல்லு டிஜிட்டல் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கும், எக்ஸ் கார்ப், கூகுள், மெட்டா இன்க், ஆப்பிள் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மனு விவரம்: ஓடிடி, சமூக வலைதள ஆபாசம் தொடர்பான மனுவில், “முன்பு தனிநபர் தவறாக இருந்த ஒன்று, இன்று பரந்துபட்ட பிரச்சினையாகி உள்ளது. சமூக வலைதளம் தொடங்கி ஓடிடி வரை இன்று எல்லா டிஜிட்டல் தளங்களிலும் இந்த வன்முறை ஊடுருவியுள்ளது. இதை ஒழுங்குபடுத்தவில்லை என்றால், இது சமூக மதிப்பீடுகள், மனநலன் மற்றும் பொது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையும். இத்தகைய கன்டென்ட்டுகள் தான் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான மனநிலையில் இளம் வயதினர் மத்தியில் ஊக்குவிக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், “இந்த மனு வெறும் விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டது அல்ல. இது உண்மையான அக்கறையின் வெளிப்பாடு” என்று வாதிட்டதோடு, சமூக வலைதளங்களில் எவ்வித கட்டுப்பாடுமின்றி வெளியாகும் சில கன்டென்டுகளை உச்ச நீதிமன்ற அமர்வின் பார்வைக்கு சமர்ப்பித்தார்.
மனுதாரரின் வழக்கறிஞரின் வாதங்களைக் கேட்ட நீதிபதி காவாய், “மத்திய அரசு, ஏதேனும் செய்யலாம். சட்டபூர்வமாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கூறினார். அப்போது துஷார் மேத்தா, “சில விஷயங்கள் சர்வ சாதாரணமாக பெரும்பாலானோர் பார்க்கும் ஊடகங்களில் கூட ஒளிபரப்பப்படுகிறது. சில வீடியோக்கள் வக்கிரமானதாக உள்ளன. இவற்றை ஒழுங்குபடுத்த சில வழிமுறைகள் உள்ளன. இன்னும் சில திட்டமிடுதல் நிலையில் இருக்கின்றன” என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, ஓடிடி தளங்கள் மற்றும் சில சமூக வலைதளங்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ‘ஓடிடி, சமூக வலைதளங்களில் வெளியாகும் பல்வேறு கண்டனத்துக்குரிய, ஆபாசமான, அநாகரிகமான காட்சிகள் குறித்து இந்த மனு மிக முக்கியமான அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் கூட ஓடிடி, சமூக வலைதளங்களில் வக்கிரம் மிகுந்த கன்டென்ட்டுகள் இருப்பதாக விளக்கியுள்ளார். சில வரைமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். எனவே, மத்திய அரசு சட்ட வரம்புக்கு உட்பட்டு இதன் மீதான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.