வான்கூவர்: கனடாவில் நடந்த திருவிழாவில் பங்கேற்றவர்கள் மீது எஸ்யுவி கார் தாறுமாறாக ஓடியதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
கனடாவின் வான்கூவர் நகரில் நேற்று முன்தினம் லாபு லாபு தினம் கொண்டாடப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் காலனித்துவத்தை எதிர்த்து போரிட்ட பிலிப்பைன்ஸ் தலைவரை நினைவுகூரும் வகையில் பிலிப்பைன்ஸ் மக்களால் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவையொட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி அளவில் கிழக்கு 41-வது அவின்யூ மற்றும் பிராசர் தெருவில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த கூட்டத்துக்குள் ஒரு எஸ்யுவி கார் வேகமாக நுழைந்து தாறுமாறாக ஓடியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
தீவிரவாதம் இல்லை: இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே அந்த கார் ஓட்டுநரை கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், இந்த சம்பவம் தீவிரவாத செயல் இல்லை என போலீஸார் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கனடா பிரதமர் மார் கார்னி எக்ஸ் தளத்தில், “கொடூரமான இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடன் நாங்களும் துக்கம் அனுசரிக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.