புதுச்சேரி: விசா காலாவதியானதால் வழக்கு பதிவான நிலையில், புதுச்சேரியில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் இருவர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. பல்வேறு விசாக்களில் வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் 2 பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர். இதில் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான்(39) கடந்த 2013-ம் ஆண்டு அவரின் உறவினரான பாகிஸ்தானைச் சேர்ந்த பஷியாபானு (38) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணமான பின்னர் பஷியாபானு புதுச்சேரியில் வசித்து வந்தார். இதேபோல் புதுச்சேரி பிராந்தியமான மாஹே பிராந்தியத்தில் பஷீர் (65) என்பவர் 2016-ம் ஆண்டு மருத்துவச் சிகிச்சைக்காகப் பாகிஸ்தானிலிருந்து விசாவில் வந்தார். அதன்பின் அவர் மாஹேவிலேயே தங்கிவிட்டார்.
பஹல்காம் சம்பவத்தின் காரணமாக பஷியா பானு, பஷீர் ஆகியோர் இந்தியாவிலிருந்து வெளியேற வெளிநாட்டினர், பதிவு அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் பஷியா பானு, பஷீர் ஆகியோரின் விசா ஏற்கெனவே காலாவதியானதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக லாஸ்பேட்டை மற்றும் மாஹே போலீஸார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.