காஷ்மீரில் மீண்டும் அட்டகாசம்: சமூக சேவகரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் லஸ்கர் இ-தொய்பாவின் நிழல் பயங்கரவாத அமைப்பு என தெரியவந்தது.

இதையடுத்து ‘சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் துடைத்து அழிக்கப்படுவார்கள்’ என்று பிரதமர் மோடி சூளுரைத்தார். தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக வாகா எல்லை மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.மேலும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் வேட்டையும் முடுக்கிவிடப்பட்டது. அவர்களில் 5 பேரின் வீடுகள் அடையாளம் காணப்பட்டு ராணுவத்தினரால் சுற்றி வளைத்து தகர்க்கப்பட்டது.

இதேபோல மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்க்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. நேற்று இரவில் ஷோபியான் மாவட்டத்தின் வான்டினா பகுதியில் இருந்த அட்னான் ஷாபி என்ற பயங்கரவாதியின் வீடு சுற்றி வளைத்து தாக்கப்பட்டதில் தகர்த்து அழிக்கப்பட்டது. புல்வாமா மாவட்டத்தில் உள்ள அமிர்நாஷிர் என்ற பயங்கரவாதியின் வீடும் தகர்க்கப்பட்டது.பந்திபோரா மாவட்டத்தில் லஸ்கர்-இ-தொய்பாவில் இணைந்து தீவிரமாக செயல்படும் முக்கிய பயங்கரவாதி ஜமீல் அஹ்மத் ஷெர்கோஜ்ரி என்பவனின் வீடும் தாக்கி அழிக்கப்பட்டது.

இதற்கிடையே குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள், சமூக சேவகர் ஒருவரை சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அவரது பெயர் குலாம் ரசூல் மாக்ரே (வயது 45) ஆகும்.

நேற்று, இரவில் கண்டி காஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நுழைந்து பயங்கரவாதிகள் இந்த திடீர் தாக்குதலை நடத்தினர். பயங்கரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரசூல் மாக்ரே கொல்லப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து தேடுதல் வேட்டையை ராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். பயங்கரவாதிகள் எதற்காக சமூக ஆர்வலர் ரசூலைக் கொலை செய்தார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பினரும் இந்தக் கொலைக்கு பொறுப்பேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காஷ்மீரின் அமைதியைச் சீர்குலைக்க வேண்டும் என்ற பயங்கரவாதிகள் சதியின் மற்றொரு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.