ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
தொடர்ந்து குஜராத்தின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் களம் இறங்கினர். இருவரும் நிதானமாகவும், அதே வேளையில் மோசமான பந்துகளை பவுண்டரிகள் அடித்து ரன்கள் குவித்தனர். இதில் கேப்டன் சுப்மன் அரைசதம் அடித்து அசத்தினார். மறுபுறம் தடுமாறி வந்த சாய் சுதர்சன் 30 பந்தில் 39 ரன் எடுத்த நிலையில் தீக்சனா பந்துவீச்சில் ரியான் பராக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து அதிரடி ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் களம் இறங்கினார். சுப்மன் கில் – பட்லர் இணை அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் பட்லர் சிக்சர் மழை பொழிந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய கில் 84 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களம் புகுந்தார்.
இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் மகேஷ் தீக்சனா 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ஆடி வருகிறது.
இந்நிலையில், இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய களம் இறங்கிய போது குஜராத் அணி இம்பேக்ட் வீரராக இஷாந்த் சர்மா களம் புகுந்தார். அவருக்கு பதிலாக சுப்மன் கில் வெளியேறினார். இதையடுத்து குஜராத் அணியை ரஷித் கான் வழிநடத்தி வருகிறார்.