புதுடெல்லி: “இந்த முறை சமரசம் இருக்காது. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். அவர்கள் மண்டியிடுவார்கள்” என்று பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து பயங்கரவாதத்தை அரசு கொள்கையின் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வரும் நாடு பாகிஸ்தான். இதற்கு முன் இருந்த அரசாங்கங்கள், பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும்போதெல்லாம் சிறிது கோபத்தை வெளிப்படுத்திவிட்டு, பின்னர் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பும்.
ஆனால், இந்த முறை சமரசம் இருக்காது; அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். அவர்கள் மண்டியிடுவார்கள். அரசு என்ன செய்யப் போகிறது என்பதை நாம் இங்கே ஊகிக்க முடியாது. நம்மிடம் ஒரு வலுவான, முதிர்ந்த அரசு உள்ளது. பாகிஸ்தானில் இருந்து வரும் முட்டாள்தனமான கருத்துகளைப் பார்க்கும்போது, அவர்களின் மனநிலையை சரிபார்க்க வேண்டும் என்றே தோன்றுகிறது” என தெரிவித்தார்.
தேவேந்திர ஃபட்னாவிஸ் கண்டனம்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின்போது பயங்கரவாதிகள் மதத்தைக் கேட்டு கொன்றதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் அவர்களுக்கு எங்கே நேரம் இருந்திருக்கப் போகிறது என கூறிய மூத்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் வடேடிவாருக்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இதுபோன்ற கருத்துகள், உறவினர்களை இழந்தவர்களை அவமானப்படுத்தக் கூடியவை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என்ன சொன்னார்கள் என்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். அவர்கள் கண் முன்னேதான் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. நேரில் பார்த்ததைத்தான் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்,” என்று ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
அசாமில் 22 பேர் கைது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசிய 22 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.