“தமிழ்நாடு மிகுந்த பெருமை கொள்கிறது” – பத்ம பூஷண் விருது பெற்ற அஜித்துக்கு கட்சி தலைவர்கள் வாழ்த்து!

புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்.28) நடைபெற்றது. இவ்விழாவில்,நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் அஜித்குமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல், பைக் சுற்றுப்பயணம் என தனக்குப் பிடித்த துறைகளிலும் தனி முத்திரை பதித்து, இன்று கலைத்துறையில் பெரும் சாதனைகள் படைத்ததற்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றிருக்கும் அஜித் குமாருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இன்று நாட்டின் உயரிய விருதைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள அஜித் குமார் கலைத்துறை மட்டுமன்றி பிற துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகள் படைத்து இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்.

அண்ணாமலை: இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான அஜித் குமாருக்கு நமது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். கலை மற்றும் ரேஸ் பாதையில் அவர் செய்த சாதனைகளுக்காக தமிழ்நாடு மிகுந்த பெருமை கொள்கிறது. மேலும் அவர் தொடர்ந்து வெற்றிகளையும் புகழையும் பெற வாழ்த்துகிறது.

இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம பூஷண் விருதுகள், 113 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா சந்திரகுமார், ஆந்திராவை சேர்ந்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, பிஹார் முன்னாள் துணை முதல்வர் மறைந்த சுஷில் குமார் மோடி உள்ளிட்ட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், தமிழகத்தை சேர்ந்த குருவாயூர் துரை.கே.தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர் (தினமலர்), எம்.டி.ஸ்ரீநிவாஸ், புரிசை கண்ணப்பா சம்பந்தன், ஆர்.ஜி.சந்திரமோகன், கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் ஆகிய 10 பேர் உட்பட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.