புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தின் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்து வெளியேறி 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் வந்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து கடந்த 6 நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பியுள்ளனர். இது தொடர்பாக பேசிய ஓர் அதிகாரி, “கடந்த ஆறு நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பியுள்ளனர். இதேபோல், திங்கட்கிழமைக்குள் 800-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் அவர்களின் நாட்டுக்கு திரும்பியுள்ளனர்,” என்று கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் கடந்த 22-ம் தேதி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி தலைமையில் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதில், ’பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படுகிறது. முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் இந்த எல்லை வழியாக மே 1-ம் தேதிக்கு முன்பாக திரும்ப வேண்டும். சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 24-ம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு எடுத்த முடிவுகளின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவால் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து செல்லுபடியாகும் விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்படுகின்றன. பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விசாக்கள் ஏப்ரல் 29, 2025 வரை மட்டுமே செல்லுபடியாகும்.
தற்போது திருத்தப்பட்டபடி, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் விசா காலாவதியாகும் முன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க இந்தியர்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த அறிவிப்பை அடுத்து, இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்த பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர்.
இந்தியாவின் இந்த அறிவிப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தானும் கடந்த 24-ம் தேதி அறிக்கை வெளியிட்டது. “வாகா எல்லைச் சாவடியை பாகிஸ்தான் உடனடியாக மூடும். இந்தப் பாதை வழியாக இந்தியாவிலிருந்து அனைத்து எல்லை தாண்டிய போக்குவரத்தும் விதிவிலக்கு இல்லாமல் நிறுத்தப்படும். அரசின் ஒப்புதலுடன் கடந்து சென்றவர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அந்த வழியாக திரும்பலாம். அதன்பிறகு அனுமதிக்கப்பட மாட்டார்கள். சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் இந்திய நாட்டினருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது. சீக்கிய மத யாத்ரீகர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படுகிறது. SVES-இன் கீழ் பாகிஸ்தானில் தற்போது உள்ள இந்தியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமானப் படைகளின் ஆலோசகர்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் ஏப்ரல் 30-க்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும். இந்த ஆலோசகர்களுக்கு உதவும் பணியில் உள்ள ஊழியர்களும் இந்தியாவுக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்” என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது