பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை எம்பியுமான கபில் சிபல் கூறியதாவது: பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசோடு இணைந்து செயல்படுகின்றன. இந்த சூழலில் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதித்து, கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும்.
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் அணுகுமுறையை நாமும் பின்பற்ற வேண்டும். தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானோடு வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு இந்தியாவில் இடமில்லை என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக நாடாளுமன்ற விவகார கேபினட் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சிறப்பு கூட்டத்துக்கான தேதி முடிவு செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படும். இதன்பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் போரின்போது அப்போதேய பிரதமர் நேரு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டினார். இதை பின்பற்றி தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் சிறப்பு கூட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது ஒட்டுமொத்த நாடும் ஓரணியாக செயல்பட வேண்டும். இதை உறுதி செய்ய, பஹல்காம் தாக்குதலை கண்டித்து நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்படும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.