பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட விடுவிக்கப்படமாட்டாது என மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
இந்நிலையில், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். பின்னர் சி.ஆர்.பாட்டீல் கூறியதாவது:
நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளது. எனவே, ஒரு சொட்டு தண்ணீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய உள் துறை அமைச்சருடனான சந்திப்பின்போது, இந்திய நதிநீர் பாகிஸ்தானுக்குள் பாய்வதைத் தடுப்பது தொடர்பான விரிவான திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, மூன்று வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்காக குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்டகால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் ஆறுகள் தூர்வாரப்பட்டு பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து திருப்பி விடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உமர் அப்துல்லா ஆதரவு: இதுகுறித்து காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் தளத்தில், “மத்திய அரசின் முடிவு சரியானது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நாங்கள் ஒருபோதும் ஆதரித்ததில்லை. இந்த ஒப்பந்தம் காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றுதான் நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்” என பதிவிட்டுள்ளார்.