விமான நிலையம், கஃபே அல்லது மாலில் அமர்ந்திருக்கும் போது இலவச வைஃபையைப் பயன்படுத்தும் பழக்கம், நம்மில் பலருக்கு இருக்கலாம். அப்போது மிகவும் கவனமாக இருங்கள். இலவச பொது Wi-Fi வசதியானதாகத் தோன்றலாம், ஆனால் அது உங்களுக்கு மிகவும் ஆபத்தானதாக உருவெடுக்கக் கூடும் என எச்சரிக்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள். பல பொது வைஃபை நெட்வொர்க்குகளில், பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதில்லை. இதனால் ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு நீங்கள் எளிதான இலக்காக மாறக் கூடும்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒரு எச்சரிக்கை
சைபர் மோசடி சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு, பொது வைஃபையைப் பயன்படுத்தி வங்கி அல்லது எந்தவொரு நிதி பரிவர்த்தனைகளையும் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டு, பண மோசடிக்கு ஆளாக நேரிடலாம்.
பொது வைஃபை ஏன் ஆபத்தானது?
பல பொது வைஃபை நெட்வொர்க்குகள் ஹேக்கிங் மற்றும் சைபர் மோசடியை தடுக்கும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை அல்ல என்று அரசாங்கம் கூறியுள்ளது. இத்தகைய நெட்வொர்க்குகள் ஹேக்கர்களுக்கு எளிதான இலக்காகின்றன. சைபர் குற்றவாளிகள் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் சாதனத்தை அணுகி உங்கள் தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களைத் திருடலாம். இது தரவு திருட்டு மற்றும் நிதி இழப்புக்கு வழிவகுக்கும்.
தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனமான CERT-In வழங்கிய ஆலோசனை
CERT-In என்பது இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம். நாட்டில் சைபர் தாக்குதல்களைத் தடுப்பதும், டிஜிட்டல் இடத்தைப் பாதுகாப்பானதாக்குவதும் இதன் முக்கிய பணி. இந்நிலையில், டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்த, இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In) ‘விழிப்புணர்வு தினத்தை’ முன்னிட்டு இந்த நினைவூட்டலை வெளியிட்டுள்ளது. பொது வைஃபை மூலம் வங்கி, ஆன்லைன் ஷாப்பிங் அல்லது எந்தவிதமான முக்கியமான செயல்பாடுகளையும் தவிர்க்க வேண்டும் என்று நிறுவனம் கூறியது. பொது வைஃபை மூலம் மின்னஞ்சல்களைச் சரிபார்ப்பது அல்லது சமூக ஊடகக் கணக்குகளில் உள்நுழைவதும் ஆபத்து தான் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், உங்கள் கணக்கின் கடவுச்சொல், தனிப்பட்ட விவரங்கள் மற்றும் நிதித் தகவல்கள் திருடப்படலாம்.
ஹேக்கர்களிடம் இருந்து தப்பித்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
CERT-In சில எளிதான மற்றும் முக்கியமான பாதுகாப்பு நடைமுறை குறிப்புகளையும் தனது ஆலோசனையில் பகிர்ந்துள்ளது.
1. தெரியாத இணையதள லிங்குகளை அல்லது இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்.
2. அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் வலுவான மற்றும் நீண்ட கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும்.
3. வெளிப்புற இயக்ககத்தில் உள்ள அனைத்து முக்கியமான கோப்புகளையும் தொடர்ந்து காப்புப் பிரதி எடுக்கவும்.
4. தெரியாத வைஃபை நெட்வொர்க்குடன் இணைத்த பிறகு, வங்கி அல்லது பணம் செலுத்துதல் தொடர்பான எந்த வேலையையும் செய்ய வேண்டாம்.
மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் தனிப்பட்ட தகவல்கள் பிற கைக்கு செல்வதைத் தடுக்கலாம். சரியான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், மின்னஞ்சலைச் சரிபார்ப்பது அல்லது பொது வைஃபை மூலம் சமூக ஊடகக் கணக்குகளில் உள்நுழைவது போன்ற எளிய செயல்கள் கூட ஆபத்தானவை என்று அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.