ஸ்பெயின், போர்ச்சுக்கலில் பெரும் மின்வெட்டு: ரயில் சேவை, சாலை போக்குவரத்து கடும் பாதிப்பு

மாட்ரிட்: ஸ்பெயின், போர்ச்சுக்கலின் பல நகரங்களில் இன்று பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டது என்றும், மின்சாரமின்றி பல லட்சம் மக்கள் தவித்த நிலையில் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மின்வெட்டால் பாதிக்கப்பட்ட நகரங்களில் மாட்ரிட், பார்சிலோனா, லிஸ்போன், செவில்லே மற்றும் போர்டோ போன்ற முக்கியமான தொழில் நகரங்களும் அடங்கும். மின்வெட்டு காரணமாக ரயில் சேவைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்பெயின் போக்குவரத்து ஆணையமான டிஜிடி, மின்வெட்டு காரணமாக மக்கள் தங்களின் கார்களை அவசியமின்றி பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் வேலை செய்யாததால், மாட்ரிட் நகரின் மையப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று உள்ளூர் வானொலி தெரிவித்தது.

இந்த நிலையில், அரசும், மின் இணைப்பு நிறுவனமான ரெட் எலக்ட்ரிகா மின் தடைக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும், மாற்றுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளன. ஐரோப்பா முழுவதும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் பொது ஒளிபரப்புச் சேவையான ஆர்டிவிஇ, “உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணிக்கு பல்வேறு பகுதிகள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டது. நிறுவனத்தின் செய்தி அறை, மாட்ரிட்டில் உள்ள ஸ்பெயின் நாடாளுமன்றம், நாட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் இருளில் மூழ்கின என்று தெரிவித்துள்ளது. பார்சிலோனா மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாட்ஸ்-அப் அரட்டைகளில் மின்வெட்டு குறித்து தகவல் பகிர்ந்திருந்தனர்.

சுமார் 10.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட போர்ச்சுக்கலின் தலைநகர் லிஸ்போன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களுடன், நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டன. போர்ச்சுக்கல்லின் மின் விநியோக நிறுவனமான இ-ரிடஸ், ஐரோப்பாவின் மின் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.