இஸ்லாமபாத்: ‘‘நாங்கள் வைத்துள்ள 130 அணு ஆயுதங்கள் காட்சிக்கு அல்ல. இந்தியாவுக்காகத்தான் வைத்துள்ளோம்’’ என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என இந்தியா அறிவித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் புட்டோ ஜர்தாரி, ‘‘சிந்து நதி எங்களுக்கு சொந்தமானது. அதில் தண்ணீரை நிறுத்தினால் ரத்த ஆறு ஓடும்’’ என்றார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிப் அப்பாஸி இது குறித்து கூறுகையில், ‘‘ சிந்து நதியில் இந்தியா தண்ணீரை நிறுத்தினால், போருக்கு தயாராக இருக்க வேண்டும். கோரி, ஷஹீன் மற்றும் ஹஸ்னவி போன்ற ஏவுகணைகளையும், 130 அணு ஆயுதங்களையும் நாங்கள் காட்சிக்கு வைத்திருக்க வில்லை. இந்தியாவிற்காகத்தான் வைத்துள்ளோம்’’ என கூறியுள்ளார்.