26 ரஃபேல் மரைன் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்: இந்தியா – பிரான்ஸ் கையெழுத்து

புதுடெல்லி: இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-மரைன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா – பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே இன்று (திங்கள்கிழமை) கையெழுத்தானது. இதில் 22 ஒற்றை இருக்கை விமானங்களும் 4 இரட்டை இருக்கை விமானங்களும் அடங்கும்.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-மரைன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா – பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே இன்று (திங்கள்கிழமை) கையெழுத்தானது. இதில் 22 ஒற்றை இருக்கை விமானங்களும் 4 இரட்டை இருக்கை விமானங்களும் அடங்கும்.

இந்த ஒப்பந்தத்தில் பயிற்சி அளித்தல், உபகரணங்கள், சிமுலேட்டர், ஆயுதங்கள் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான போக்குவரத்து ஆகியவை உள்ளடங்கும். இதில் இந்திய விமானப்படையின் தற்போதுள்ள ரஃபேல் விமானங்களுக்கான கூடுதல் உபகரணங்களும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பிரான்ஸ் ஆயுதப்படைகள் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகார்னுவும் கையெழுத்திட்டுள்ளனர்.

ஒப்பந்தத்தின் கையொப்பமிடப்பட்ட நகல்கள், இன்று (2025 ஏப்ரல் 28) புதுடெல்லியில் உள்ள நவசேனா பவனில் பாதுகாப்பு அமைச்சகச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்திய – பிரான்ஸ் அதிகாரிகளால் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

தற்சார்பு இந்தியா மீதான அரசின் உந்துதலுக்கு ஏற்ப, இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவில் உள்நாட்டு ஆயுதங்களைத் தயாரிப்பதில் ஒருங்கிணைப்பதற்கான தொழில்நுட்பப் பரிமாற்றமும் அடங்கும். இந்தியாவில் ரஃபேல் பாகங்களுக்கான உற்பத்தி வசதியை அமைப்பது, விமான இன்ஜின், சென்சார்கள், ஆயுதங்களுக்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு வசதிகளை அமைப்பது ஆகியவை இதில் அடங்கும். இந்த ஒப்பந்தம் ஏராளமான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளித்து, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருவாயையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்சின் டசால்ட் ஏவியேஷனால் தயாரிக்கப்படும் ரஃபேல்-மரைன் என்பது கடல்சார் சூழலில் சிறந்த செயல்பாட்டு திறன்களைக் கொண்ட போர் விமானமாகும். இந்த விமானங்களின் விநியோகம் 2030-க்குள் நிறைவடையும்.

இந்திய விமானப்படையால் இயக்கப்படும் ரஃபேல் போர் விமானத்துக்கும் ரஃபேல் – மரைனுக்கும் ஒற்றுமை உண்டு. இதன் கொள்முதல் கூட்டு செயல்பாட்டுத் திறனை கணிசமாக மேம்படுத்துவதோடு, இந்திய கடற்படை, இந்திய விமானப்படை ஆகிய இரண்டிற்கும் விமானங்களுக்கான பயிற்சியையும் செயல்பாட்டையும் மேம்படுத்தும். இது கடலில் நாட்டின் விமான சக்தியை கணிசமாக அதிகரிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.