MS Dhoni: தற்போது 18வது ஐபிஎல் தொடர் (IPL 2025) நடைபெற்று வருகிறது. இதில் 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு சீசன்களை தவிர்த்து மொத்தம் 16 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) விளையாடியிருக்கிறது. நடப்பு சீசனை தவிர்த்தால், 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு வந்துள்ள சிஎஸ்கே 10 முறை இறுதிப்போட்டியில் விளையாடியிருக்கிறது.
இதில் சிஎஸ்கே (CSK) 5 முறை தோல்வியை தழுவியிருந்தாலும், 5 முறை கோப்பையை வென்று அசத்தியிருக்கிறது. 2020, 2022, 2024 ஆகிய மூன்றாண்டுகளில்தான் பிளேஆப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதிபெறவில்லை. தற்போது 4வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் சிஎஸ்கே வெளியேற 99% வாய்ப்புள்ளது.
MS Dhoni: சிஎஸ்கேவின் சறுக்கும் எழுச்சியும்…
தோனி கேப்டனாக இருந்தபோது சிஎஸ்கே 2020ஆம் ஆண்டு துபாயில் நடந்த தொடரில் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு போகவில்லை. 2021இல் தோனி தலைமையில் கோப்பையை வென்றவுடன் 2022இல் ஜடேஜா பாதி சீசன் வரை கேப்டனாக இருந்தார், அதன்பின் தோனி கேப்டனாக வந்தும் சிஎஸ்கே லீக் சுற்றோடு வெளியேறியது. 2023இல் மீண்டும் தோனி தலைமையில் கோப்பையை வென்றதும் 2024இல் கேப்டன்ஸி ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.
2024 சீசனில் முழுமையாக ருதுராஜ் கேப்டன்ஸியை கவனித்துக்கொண்டார். ஆனால், துரதிருஷ்டவசமாக 5வது இடத்தோடு சிஎஸ்கே வெளியேறியது. நடப்பு சீசனிலும் ருதுராஜ் பாதியிலேயே காயம் காரணமாக விலக தோனி மீண்டும் கேப்டன்ஸியை பெற்றுள்ளார். இப்போதும் சிஎஸ்கே 9 போட்டிகளில் 2இல் மட்டுமே வென்றிருக்கிறது. அடுத்த 5 போட்டிகளை வென்றாலும் சிஎஸ்கே பிளே ஆப் போவது வாய்ப்பு குறைவுதான்.
MS Dhoni: தோனி 2026இல் விளையாடுவாரா? மாட்டாரா?
இது ஒருபுறம் இருக்க, தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வியும் தற்போது எழுகிறது. One Last Time என மோர்ஸ் கோட் டி-சர்ட் அணிந்து சென்னையில் என்ட்ரி கொடுத்திருந்தாலும், தோனி எந்த நேரத்தில் என்ன முடிவெடுப்பார் என்பது யாராலுமே கணிக்கவே முடியாது.
2026 ஐபிஎல் சீசனில் (IPL 2026) தோனி நிச்சயம் விளையாடுவார் என முன்னாள் சிஎஸ்கே நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா பேசியிருந்தாலும், அவர் மீண்டும் சாதாரண விக்கெட் கீப்பர் பேட்டராக தொடர்வாரா அல்லது கேப்டனாக தொடர்வாரா என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் பெரும் கேள்வியாக உள்ளது. தோனி ஐபிஎல் தொடரில் விளையாடாவிட்டாலும் கூட பயிற்சியாளராகவோ, ஆலோசகராகவோ அணியில் தொடர்வார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
MS Dhoni: சிஎஸ்கேவுக்கு தோனி பிரச்னையா?
ஆனால், அவரை களத்தில், விக்கெட் கீப்பராக பார்க்கவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சிஎஸ்கே மீது இந்தாண்டே பல விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று தோனி உடனே அணியில் இருந்து வெளியேறி, இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து சிஎஸ்கே அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். ஆனால், சிஎஸ்கேவில் தோனி ஒரு பிரச்னையே இல்லை என ஒரு தரப்பு கூறி வருகிறது.
சிஎஸ்கே என்பது தோனிக்கு மிகவும் சிறப்பான ஒன்றாகும். அவர் சிஎஸ்கேவை அவ்வளவு எளிதில் விட்டுவிட்டுச் செல்ல மாட்டார். அணியை ஒரு நம்பிக்கையானவரின் கையில் ஒப்படைத்த பின்னரே வெளியேறுவார். அவருக்கு கோப்பை வாங்க வேண்டும் என்பதல்ல இலக்கு, நல்ல கிரிக்கெட்டை நோக்கிய செயல்முறையில் (Process) தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பேத நோக்கம்.
MS Dhoni: தோனியின் கம்பேக் பிளான்
ருதுராஜ் அதில் சற்று பின்னடைவை அளிப்பதாக தோனி நினைத்தால் நிச்சயம் அடுத்தாண்டும் சிஎஸ்கேவில் தோனியே கேப்டனாக தொடர்வார். ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதில் மற்றொரு நட்சத்திர அந்தஸ்து பெற்ற கேப்டன்ஸியை பார்த்துக்கொள்ளும் வீரரை சிஎஸ்கே தேடத் தொடங்கும்.
ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், டிவால்ட் பிரேவிஸ், அன்ஷூல் கம்போஜ், வன்ஷ் பேடி, நூர் அமகது என உள்ளிட்ட இளம் படையை கொண்டு தோனி, 2026 சீசனில் சிஎஸ்கேவுக்கு முரட்டு கம்பேக் கொடுக்க வைக்க வாய்ப்புள்ளது.