ஸ்ரீநகர்: “ஒருகாலத்தில் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒவ்வொருமுறை உரசல்வரும்போதும் நான் பரிந்துரைத்தேன். ஆனால், இப்போது பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்ல முடியும்? இனியொரு ’பஹல்காம் தாக்குதல்’ நடக்காத அளவில் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர்” என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில், “நான் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும்படி ஒவ்வொரு முறையும் பரிந்துரைத்தவன். ஆனால், இப்போது நடந்த தாக்குதலில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம். நாம் அவர்களுக்கு நீதி செய்ய வேண்டாமா? பாகிஸ்தான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையே இன்று தேசம் விரும்புகிறது. பஹல்காம் தாக்குதல் போல் இனியொருமுறை நடக்காத அளவுக்கு அந்தத் தாக்குதல் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
மத அடிப்படையிலான இரு நாட்டுக் கொள்கையை 1947-லேயே நிராகரித்தவர்கள் தான் ஜம்மு – காஷ்மீர் மக்கள். அதை இப்போதும் அவர்கள் எதிர்க்கத்தான் செய்கிறார்கள். நமது அண்டை நாட்டுக்கு (பாகிஸ்தானுக்கு) தான் நிகழ்த்தியது மனிதாபிமான படுகொலை என்பதையே உணர்ந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறான தாக்குதல்கள் மூலம் நாங்கள் (முஸ்லிம்கள்) பாகிஸ்தானுடன் சென்றுவிடுவோம் என அவர்கள் எண்ணுவார்களேயானால் அது நடக்காது என்று தெளிவுபடுத்த விரும்புகிறோம். 1947-லேயே போகாதவர்கள், இப்போது ஏன் அவர்களுடன் செல்லப் போகிறோம். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் எல்லோருமே சமம் தான். பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.” என்று கூறியுள்ளார்.
நடந்தது என்ன? – ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தள்ளியிருக்கும் பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த ஏப்.22-ம் தேதி நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பின்பு நடந்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, “பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கற்பனை செய்யமுடியாத பதிலடியை சந்திப்பார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் இன்று ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உமர் அப்துல்லா மிக உருக்கமாகப் பேசியிருந்தார்.
இந்தக் கடினமான சூழலில் மத்திய அரசின் முடிவுக்கு துணை நிற்கப்போவதாகவும், அதேபோல் இந்த நேரத்தில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து போன்ற விவகாரங்களை எழுப்பப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், பஹல்காம் விவகாரத்தில் ஃபரூக் அப்துல்லாவும் மத்திய அரசு ஆதரவு நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது கவனிக்கத்தக்கது.