புதுடெல்லி:
உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றார். இவரது பதவிக் காலம் வரும் மே 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு சஞ்சீவ் கன்னாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியிருந்தது. இதனையடுத்து, தனக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு மூத்த நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் (பி.ஆர்.கவாய்) பெயரை சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரைக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் (வயது 64) நியமிக்கப்படுவதாக சட்ட அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
நீதிபதி பி.ஆர்.கவாய், வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளார். எனவே, அவர் சுமார் 6 மாதங்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தலைமை நீதிபதி பதவி ஏற்கும் 2-வது தலித் நீதிபதி கவாய் என்பது குறிப்பிடத்தக்கது.