ஒட்டாவா,
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங். இவரது மகள் வன்ஷிகா (வயது 21) .
வன்ஷிகா கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் கனடா சென்றார். அவர் ஒட்டாவாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார்.
இந்நிலையில், கடந்த 25ம் தேதி மாலை வன்ஷிகா தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளியே சென்றார். அந்த வீட்டில் தங்கி இருந்த சக மாணவிகளிடம் , வேறு வாடகை வீடு பார்க்க செல்வதாக கூறிவிட்டு வன்ஷிகா சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் வன்ஷிகா வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் மற்றும் தோழிகள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக இந்திய தூதரகத்திலும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, மாயமான வன்ஷிகாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 4 நாட்களாக தேடப்பட்டு வந்த வன்ஷிகா இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வன்ஷிகாவின் உடல் அவர் தங்கி இருந்த வீட்டிற்கு அருகே கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வன்ஷிகாவை யாரேனும் கொலை செய்தனரா? தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.