சென்னையில் ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2 முதல் மாற்றம்!

சென்னை: பயணிகளின் கோரிக்கைகள் அடிப்படையில், சென்னையில் ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்: சென்னையில் கடந்த 19-ம் தேதி முதல் , 12 பெட்டிகளுடன் கூடிய ‘ஏசி’மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாக தலா இரண்டு சேவையும், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே தலா ஒரு சேவையும் ஏசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது. ஏசி மின்சார ரயிலில் பல வசதிகள் இருந்தாலும், கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், இந்த ரயில் நேரத்தை மாற்றி அமைக்கவும் கருத்துகள் எழுந்தன.

இதற்கிடையில், பொதுமக்களிடம் கருத்துகளை ரயில்வே நிர்வாகம் கேட்டது. இதுதவிர, கள ஊழியர்களின் நேரடி தொடர்பு மூலம் பயணிகளின் பதில்கள் பெறப்பட்டன. அலுவலகம் செல்பவர்களுக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை வழங்குவதற்காக, செங்கல்பட்டு – சென்னை கடற்கரை ரயில் (49004 ) வருகை நேரத்தை முன்கூட்டியே அதிகரிப்பதற்கான விருப்பம் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாலையில் அலுவலகம் முடித்து, செல்வோர் வசதிக்காக ரயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது. பயணிகளின் இக்கருத்துகளுக்கு ஏற்ப, ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளது.

முதல் ஏசி மின்சார ரயில் சேவை, தாம்பரத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டுவை காலை 7.35 மணிக்கு சென்றடையும். 2-வது ஏசி மின்சார ரயில் சேவை, செங்கல்பட்டு-வில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை காலை 9.25 மணிக்கு வந்தடையும். 3-வது சேவை, சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.41 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தை காலை 10.36 மணிக்கு அடையும். 4-வது ரயில் சேவை, தாம்பரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை மதியம் 1.55 மணிக்கு அடையும்.

5-வது ரயில் சேவை, சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டுக்கு மாலை 4 மணிக்கு அடையும். 6-வது ரயில் சேவை, செங்கல்பட்டில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு மாலை 6 மணிக்கு வந்தடையும். 7-வது ஏசி மின்சார ரயில் சேவை, சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.17 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டுவை இரவு 7.50 மணிக்கு அடையும்.

8-வது ரயில் சேவை, செங்கல்பட்டில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தை இரவு 8.50 மணிக்கு அடையும். ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மாற்றத்துக்கு ஏற்ப, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 2 மின்சார ரயில்கள், கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் ஒரு மின்சார ரயில் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதுதவிர, 4 ஏசி மின்சார ரயில் சேவை மட்டும் ஏப்.2-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை திருசூலத்தில் தற்காலிகமாக நின்று செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.