தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் நடமாட்டம் விவகாரம்: பேரவையில் முதல்வர் – எதிர்க்கட்சி தலைவர் காரசார விவாதம்

தமிழகத்தில் போதைப்பொருள், கஞ்சா விற்பனை விவாகாரம் தொடர்பாக நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கும் காரசார விவாதம் நடந்தது.

சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: பொதுக்கூட்டம், மக்கள் பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுக்கிறது. காவல்துறைக்கு தெரியாமல் போதைப்பொருள், கஞ்சா விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை. சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் போதைக்கு அடிமையாகி சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: போராட்டம் நடத்த உரிய நேரத்தில் விண்ணப்பித்தால் காவல்துறை அனுமதி அளிக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் போதைப்பொருட்கள், குட்கா விற்பனை தலைவிரித்தாடியது. நாங்கள் அதனை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்தோம். போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக மத்திய அரசு அறிக்கை கூறுகிறது.

பழனிசாமி: அண்டை மாநிலங்களில் இருந்து ரயில்கள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. உளவுத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டது. எதிர்க்கட்சிகளின் செயல்களைத்தான் அவர்கள் கண்காணிக்கின்றனர். கொள்ளையடிக்க ஏற்ற இடம் என்று கருதிதான் சென்னைக்கு விமானத்தில் வந்து கொள்ளை அடித்துச்செல்கிறார்கள். குற்றவாளிகளுக்கு தமிழகம் என்றால் பயமும், அச்சமும் வரவேண்டும்.

அவை முன்னவர் துரைமுருகன்: திமுக ஆட்சியில் ரவுடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின்: கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் விரைந்து கைதுசெய்தனர். உங்கள் ஆட்சிக்காலத்தில் போலீஸ் டிஜிபி, ஐஐ ஆகியோர் கூட குட்கா விற்பனையில் ஈடுபட்டது தெரியாதா. அதிமுக ஆட்சிக்காலத்தில் டெல்லியில் இருந்து விமானத்தில் வந்து கொள்ளையடித்துச் சென்றது ஞாபகம் இருக்கட்டும்.

பழனிசாமி: போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். நாங்கள் 2026-ல் ஆட்சிக்கு வந்ததும் இந்த சம்பவம் குறித்து மீண்டும் விசாரிப்போம்.

ஸ்டாலின்: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். குற்றப்பத்திரிகையும் விரைந்து தாக்கல் செய்யப்பட்டது. இதை உயர் நீதிமன்றமே பாராட்டியுள்ளது. உங்கள் ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் எப்படி பாதுகாக்கப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தேசிய சராசரியைவிட தமிழகம் அதிகம்.

சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்: திமுக ஆட்சியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு காரணமாக பெண்கள் தைரியமாக புகார் செய்கின்றனர். அதனால் போக்சோ வழக்குகள் அதிகம் பதிவாகி வருகின்றன.

பழனிசாமி: திமுக ஆட்சியில் என்கவுன்ட்டர், லாக்-அப் மரணங்கள் தொடர்கின்றன. போலி என்கவுன்ட்டர்கள் மூலம் கொல்லப்படுவதை உயர் நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன.

ஸ்டாலின்: உரிய அனுமதி பெற்று குவாரிகளில் இருந்து கனிமங்களை எடுத்துச்செல்ல அரசு அனுமதி அளிக்கிறது. அனுமதி பெறாதவர்கள் மீது அபராதம் உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

தொடர்ந்து யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீரை கொட்டப்பட்ட சம்பவம் குறித்து பழனிசாமி பேசினார். அப்போது குறிக்கிட்ட முதல்வர், இச்சம்பவம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை நிலுவையில் இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரினார். அவ்வாறே நீக்கப்படுவதாக பேரவை தலைவரும் அறிவித்தார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் அவையில் அமளி நிலவியது.

அப்போது பழனிசாமி, சவுக்கு சங்கர் விகாரத்தில் உங்களுக்கு அச்சமும் பயமும் வருகிறது என்றார். இதற்கு பதிலளித்த ஸ்டாலின் எங்களுக்கு அச்சமோ, பயமோ இல்லை என்றார். பின்னர் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று சவுக்கு சங்கர் விவகாரம் தொடர்பான பேச்சு அவைக்குறிப்பில் பதிவு செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.