சென்னை: “ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?” என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்? ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடாகவும், வசை சொல்லாகவும் இருப்பதால் ‘காலனி’ என்ற சொல் இனிமேல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்து இருக்கிறார். வாய் ஜாலங்களில் வித்தகர்களான திமுகவினர் அறிவித்து வரும் வெற்று விளம்பர அறிவிப்புகளின் வரிசையில் இதுவும் ஒன்று.
‘காலனி’ பெயர் நீக்கம் என்பது புரட்சி என்று தம்பட்டம் அடிக்கும் திமுகவினரை பார்த்து நான் எழுப்பும் கேள்வி இதுதான். கட்சியிலும் ஆட்சியிலும் காலனிகளை உருவாக்கி வைத்திருக்கிறாரே முதல்வர் மு.க.ஸ்டாலின், அதனை நீக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்? சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிடும் அதே நாளில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே ஏர்ணாமங்கலம் ஊராட்சியில் உள்ள பாணம்பட்டு கிராமத்தில் குடிநீர் தொட்டியின் மீது மர்ம நபர்கள் மனிதக் கழிவை பூசிவிட்டுச் சென்றுள்ளனர். காலையில் தண்ணீர் பிடிக்கச் சென்ற பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் நடைபெறும் இதுபோன்ற கொடூரச் செயல்கள், முதல்வரின் கவனத்திற்கு வருகிறதா? இந்த திருட்டு, ஏமாற்று, மோசடி திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்கள் படும் துன்பங்கள் ஒன்றா, இரண்டா? எதற்கு தான் இதுவரை தீர்வு கிடைத்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு, டிசம்பர் 16-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தேக்கத் தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், இந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு புகார் கொடுத்தவர்களையே குற்றவாளிகளாக்கி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த கொடூரம் அரங்கேறியது.
தமிழ்நாடு முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழகத்தின் பல பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டைச் சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.
உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு பட்டியலின மக்களுக்கு மாபெரும் சமூக அநீதி இழைக்கப்படுவது இந்த திராவிட மாடல் ஆட்சியில் தான். தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது நடக்கும் கொடூர செயல்களுக்கு தீர்வு காண, ஆதிக்க எண்ணம் கொண்ட திமுகவினருக்கு எப்படி மனம் வரும்? சாதனை ஆட்சி நடத்துவதாக சட்டசபையில் பெருமை பேசும் முதல்வரும், திமுகவினரும் தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற அவலங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
இந்தக் கொடூர, அவல ஆட்சியின் 2.0-வை மக்கள் பார்க்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் விருப்பப்படுகிறார். ஆனால் இந்த கையாலாகாத, திராணியற்ற திமுக அரசை வீட்டுக்கு அனுப்பவே மக்கள் விரும்புகிறார்கள்” என்று எல்.முருகன் கூறியுள்ளார்.