புதுடெல்லி: கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது அங்கிருந்த ‘ஜிப் லைன்’ ஆப்பரேட்டர் ‘அல்லாஹு அக்பர்’ என முழக்கமிட்டது இயல்பான ரியாக்ஷன் தான் என என்ஐஏ கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 22-ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த சாகச அனுபவத்துக்கான ஜிப் லைனில் சுற்றுலா பயணி ஒருவர் பயணித்துள்ளார். அதன்போது தனது செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார் அந்த சுற்றுலா பயணி. அப்போதுதான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கி தோட்டாக்களின் சத்தம் கேட்டதும் அந்த ஜிப் லைனை இயக்கிய ஆப்பரேட்டர் ‘அல்லாஹு அக்பர்’ என முழங்கியதாக சுற்றுலா பயணி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து முஸ்ஸமில் எனும் பெயர் கொண்ட அந்த ஜிப் லைன் ஆப்பரேட்டரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அது இயல்பான ரியாக்ஷன் என என்ஐஏ வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதை தனியார் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. திடீரென ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக அப்படி சொல்லி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் ‘ஹே ராம்’ என்று கூறுவதைப் போன்றது தான் இது என என்ஐஏ தரப்பில் தெரிவித்துள்ளதாக தகவல்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பாகிஸ்தானும் எதிர்வினையாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.