புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் செவ்வாய்க்கிழமை உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப் படை தளபதி அமர் பிரீத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையை எந்த வகையில், எப்படி, எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்தையும் ராணுவம் தீர்மானிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக உரிய பதிலடி கொடுப்பதில் நமது தேசம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது என்றும், தேசத்தின் ஆயுதப் படைகளின் தொழில்முறை திறன் சார்ந்து தனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்து இருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அமைச்சரவை கூட்டம்: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரம் தொடர்பாக, கடந்த 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானியருக்கான விசா ரத்து, அட்டாரி எல்லை மூடல், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முப்படை ஆலோசகர்கள் பதவியிடங்கள் ரத்து ஆகிய 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி தலைநகர் டெல்லியில் அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டத்தில் உறுதி அளித்தன.
இந்தச் சூழலில், உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்ததன் தொடர்ச்சியாக, பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரம் குறித்து ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை புதன்கிழமை காலை 11 மணிக்கு கூடுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பது, அட்டாரி எல்லை மூடல், பாகிஸ்தானியருக்கான விசா ரத்து, பாகிஸ்தானுடனான உறவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
பதற்றம் நீடிப்பு: முன்னதாக, கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம், அந்த நாட்டு உளவுத் துறை இருப்பது தெரியவந்துள்ளது. இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவமும், மத்திய ஆயுத போலீஸ் படையும் (சிஏபிஎப்) செவ்வாய்க்கிழமை போர் பயிற்சியில் ஈடுபட்டன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்லைப் பகுதியை சேர்ந்த கிராம மக்களுக்கு ராணுவத்தின் சார்பில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. காஷ்மீரின் ஜம்மு பகுதியில் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) கமாண்டோக்கள், மாநில போலீஸார் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர். மேலும், ராணுவத்தின் தரப்பில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டன. இது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்த தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரின் 48 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.