குமுளி: முல்லை பெரியாறு அணை பலவீனமாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது, புதிய அணை கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த கேரள அரசுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என உச்ச நீதிமன்றம் இரண்டு முறை தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் இந்த அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு இன்று (ஏப்.29) பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதில், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது, புதிய அணை கட்டுவதே தீர்வாக அமையும். புதிய அணைக்கான மொத்த செலவையும் கேரள அரசே ஏற்கும். அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக்பாலசிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து உள்ளது. 2006 மற்றும் 2014-ல் உச்சநீதிமன்றம் பெரியாறு அணை குறித்து தெளிவான ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. அதாவது அணை பலமாக உள்ளதால் அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். அடுத்ததாக பேபி அணையை பலப்படுத்திய பின்பு நீர்மட்டத்தை படிப்படியாக 152 அடி உயர்த்திக் கொள்ளலாம் என்று அந்த தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளது.
இதற்கிடையில் தேவையில்லாமல் கேரள அரசு இப்பொழுது உச்சநீதிமன்றத்தில், அணை எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அந்த அணையை உடைக்க வேண்டும் என்றுஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டிய அவசரம் எதற்கு வந்தது. இரண்டு மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்சனையால் சண்டை வரக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இரண்டு அரசுகள் அமர்ந்து பேச வேண்டிய விஷயத்தை எதற்கெடுத்தாலும் உச்சநீதிமன்றத்துக்கு போய் கொண்டு இருந்தால் 2014இல் நீதியரசர்கள் ஐந்து பேர் கொண்ட குழு அணை பலமாக உள்ளது என்று கொடுத்த தீர்ப்பு என்னாவது?
அணை பலமாக உள்ளது என்று தீர்ப்பளித்த அதே நீதிமன்றத்தில்பலவீனமாக உள்ளது என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் இது உச்சநீதிமன்றத்தை ஏமாற்றுவதற்கு சமம். எனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்எடுத்து 356 வது சட்டப்பிரிவை பயன்படுத்தி கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
அரசியல் செல்வாக்கை இழந்த பினராய் விஜயனின் அரசு பெரியாறு அணையை கையில் எடுத்தால் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலே வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறார். அதற்காகத்தான் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.
பெரியாறு அணைக்கு 999 ஆண்டுகள் ஒப்பந்தம் இருக்கிறது, கேரளா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம், தமிழக அரசை கேலி செய்யும் வகையில் உள்ளது.
பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை கடுமையாக கண்டிக்கிறோம் என்றார். உடன் பெரியாறு வைகை பாசன விவசாய சங்க தலைவர் மனோகரன், முன்னாள் தலைவர் சலேத்து உட்பட பலர் இருந்தனர்.